வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (07/02/2018)

கடைசி தொடர்பு:11:32 (07/02/2018)

``ஊருக்கெல்லாம் தச்சுத் தர்றேன்... என் வாழ்க்கை கிழிஞ்சு கிடக்கு!" - தையல் தொழிலாளி பரசுராமன்

``பத்து வருஷங்களா இதே இடத்துலதான் துணி தைக்கிறேன். பலரது கிழிந்த துணியைத் தைச்சு, பயன்படுற மாதிரி தர்றேன். ஆனா, என் வாழ்க்கை கிழிஞ்சு கிடக்கு. தையல்மாசத்துல முக்கால்வாசி நாள், கால் வயித்துக் கஞ்சிக்கே வருமானம் பத்தலை. இருந்தாலும், `இந்த வயசுலயும் உழைச்சு சாப்பிடுறோம்'கிற நிம்மதி போதும்ய்யா" என்று கிழிந்து தன்னைக் கிறங்கடித்த வாழ்க்கை அனுபவங்களை ஒருங்கே தைக்க முயல்கிறார் 68 வயது பரசுராமன். 

இந்த வறுமையிலும் அவர் பள்ளிக் குழந்தைகளுக்கும் வறியவர்களுக்கும் இலவசமாக துணி தைத்துத்  தருவதுதான், இந்த மனிதரை உயர்த்திக் காட்டுகிறது.

கரூர் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமத்திலிருந்து வடக்கு காந்தி கிராமம் போகும் வழியில் இருக்கிறது இவரது கடை, வீடு, ஆஸ்தி, அந்தஸ்து எல்லாம். ஆம்! சாலை ஓரமாக உள்ள பழைய சாக்குப் படுதாக்களையும், கிழிந்த ஃபிளெக்ஸ்களையும்தாம்  குறிப்பிடுகிறேன்.

இவற்றை வைத்து நான்கு பக்கங்களிலும் குச்சிகளை ஊன்றி, அதில் கூரையாகவும் தடுப்பாகவும் விரித்து, வீடாகவும் தையல் தொழில் செய்யும் இடமாகவும் பயன்படுத்திவருகிறார். இத்துப்போன பழைய தையல் மெஷின், துருபிடித்துக் கிடக்கும் `பழைய' இரும்புக் கட்டில், ஒரு `தைய தக்கா' ஆட்ட ஸ்டூல், நூல்கண்டுகள், ஊசிகள், பழைய துணிபண்டல் ஒன்று, தைக்க வந்திருக்கும் பேக்குகள், பழைய துணிகள்... இவைதாம் அந்தக் கடையில் வியாபித்திருந்தன. 

``வாழ்ந்து கெட்ட குடும்பம்னு சொல்வாங்களே, அப்படி ஒரு குடும்பத்தில் பிறந்தவன்தான் நான்" என்ற அவருக்கு ஆஸ்துமா அடிக்கடி இருமலை வரவழைக்க, இருமிக்கொண்டே தனது வாழ்க்கைக் குறிப்பை வரைய ஆரம்பித்தார் பரசுராமன்.

``எனக்கு சொந்த ஊர், இதோ கூப்பிடும் தொலைவில் உள்ள திருமாநிலையூர். அப்பா எஸ்.கே.கோவிந்தராஜ், பெரிய தியாகி. காங்கிரஸ் கட்சியிலிருந்து, காமராஜரை தெய்வமா மூணு வேளையும் தொழுதவர். ரெண்டு முறை கரூர் நகராட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலரா போட்டியிட்டவர். அதனால, காமராஜர் போல பொழைக்கத் தெரியாம, சொத்துபத்து சேர்க்காம போய்ச் சேர்ந்துட்டார். அப்போ டீக்கடை வெச்சிருந்தோம். கரூருக்கு வர்றவங்க எல்லாரும் வந்து எங்க கடையிலதான் டீ குடிப்பாங்க. அவ்வளவு பிரபலம்.

நாங்க பத்துப் பசங்க. நான்தான் கடைக்குட்டி. அப்பவே ஒன்பதாவது வரை படிச்சேன். வசதிவாய்ப்பு இருந்தும் அப்போ நானா மேற்கொண்டு படிக்கலை. டீக்கடை வருமானத்தை வெச்சு அஞ்சு பொம்பளைப் புள்ளைங்களையும் அப்பா கட்டிக்கொடுத்தார். அவர் இறக்கவே, டீக்கடை சரியா போகாம, குடும்பத்தை வறுமை வாட்ட தொடங்கிச்சு. `சாலை விரிவாக்கம்'னு சொல்லி, எங்க வீட்டையும் இடத்தையும் நெடுஞ்சாலைத் துறை எடுத்துக்கிச்சு.

தையல்

அதனால, நான் லாரி டிரைவர் ஆனேன். டெல்லி, ஆந்திரா, மத்தியப்பிரதேசம், கேரளானு சுத்த ஆரம்பிச்சேன். அஞ்சு பாஷைகள் தெரியும். 1980-ல் எனக்கு திருமணம் நடந்துச்சு. மனைவி ஜானகியோடு ஆரம்பத்துல வாழ்க்கை நல்லாதான் போச்சு. ரெண்டு பசங்க பொறந்தாங்க. அப்புறம் எங்களுக்குள்ள ஒத்துவரலை. அதனால, வீட்டுக்கே வராம 14 வருஷம் இந்தியா முழுக்க லாரியிலேயே சுத்தினேன். இருபது வருஷங்களுக்கு முன்னாடி என் மனைவி இறந்துட்டா. ஆஸ்துமா, மூட்டுவலி, முதுகுவலி பிரச்னைகள் வர ஆரம்பிச்சுச்சு. அப்புறம் கரூர்ல பஸ் ஓட்டினேன். அதுவும் ஒருகட்டத்துல முடியலை. வீட்டுலயும் சுத்தமா டச் விட்டுப்போச்சு. ஆனா, என்னோட அண்ணன்களும் அண்ணன் பையன்களும் என்மேல உசுரா இருந்தாங்க. அவங்களுக்கு பாரமா இல்லாம, நானே சுயமா வேலை செஞ்சு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருக்கிறேன்.

தையல்

இதுதான் வீடு. இங்கேதான் கடை. இங்கேயே வேலை, இங்கேயே படுக்கைனு பத்து வருஷங்கள் ஓடின. நாகரிகம் வளர்ந்துட்டு. இப்போல்லாம், யாரும் புதுத்துணி தைக்கிறதில்லை. ரெடிமேடா வாங்குறாங்க. லேசா கிழிஞ்சாலும், அதைத் தூக்கிப் போட்டுட்டு, புதுசா வாங்கிப் போடுறாங்க. அதுவும், என்னைப்போல நடுரோட்டுல மெஷின் போட்டுருக்கிற வயசானவன்கிட்ட யாரு தைக்கப் பிரியப்படுவா? அதனால், ஆல்ட்ரேஷன் வேலைகள் வரும். கிழிஞ்சுபோன ஜிப்புகளைத் தைக்க வருவாங்க. பள்ளி பேக்குகள், டிராவல் பேக்குகள் கிழிஞ்சுப்போயிருந்தா தைக்கக் கொடுப்பாங்க. குறைஞ்ச கூலிதான் வாங்குறேன். ஆனா, அதையும் பலர் குறைச்சுக்கொடுப்பாங்க. எனக்கு மனசு கனத்துப்போயிரும். சிலர், `இந்த வயசுலயும் இப்படி உழைக்கிறாரே'னு கேட்டதைவிட கூடகொடுப்பாங்க. தின வருமானம் அதிகபட்சம் 100 ரூபா வந்தா ஆச்சர்யம். ஆனா, பல நாள்கள் ஒத்த ரூபாவுக்குக்கூட வேலை வராது. அப்போ, பச்சைத்தண்ணிதான் எனக்கு உணவு. ஆஸ்துமாவுக்கு மருந்து வாங்க வழியில்லாம, `அது கிடக்கு கழுத'னு கண்டுக்காமவிட்டுட்டேன். ஆனா, அது தொந்தரவு பண்ணுது. என் அப்பா, உதவின்னு கேட்டு வந்தா, இல்லைன்னு அள்ளிக் கொடுத்தவர். அதனால், அந்த வம்சத்துல வந்த எனக்கு, இப்போ கொடுக்க பணம், காசு இல்லை. அதனால, என்னோட உழைப்பைத்தான் உதவியா பலருக்குச் செய்றேன். ஏழை பள்ளிக் குழந்தைகளும், என்னைப்போல் காசு, பணம் இல்லாதவர்களும் ஏதேனும் தைக்க வந்தா, அவங்களுக்கு மட்டும் இலவசமா தச்சுத் தர்றேன். அதுல, கிடைக்கிற சந்தோஷம் எதுலயும் வராது.

தையல்

வயசாயிட்டு. டிரைவர், இப்போ டெய்லர்னு இயங்குறதால முதுகுவலி, தண்டுவடப் பிரச்னை எல்லாம் வந்துட்டு. சேர்ந்தாப்புல ஒரு மணி நேரம் தொடர்ந்து பெடலை மிதிக்க முடியலை. ஊசியில நூல் கோக்க ஆள் பிடிக்கவேண்டியிருக்கு. முதியோர் உதவித்தொகை கேட்டு, கரூர் மாவட்ட கலெக்டர் ஆபீஸுக்கு 50 தடவை அலைஞ்சிருப்பேன். அங்கே இருப்பவர்கள் என்னை ஒரு மனுஷனாக்கூட மதிக்கலை. `போங்கடா நீங்களும், உங்க உதவித்தொகையும்'னு வீம்பா வந்துட்டேன். அப்புறம், வீடு இல்லாதவர்களுக்கு முத்தாலம்பட்டியில இலவச வீட்டுமனைப் பட்டா ஒதுக்கினாங்க. ஆனா, அந்த ஊர் மக்கள் என்னைத் துரத்திவிட்டுட்டாங்க. அதோட, நகராட்சி நிர்வாகத்துல இருந்து அடிக்கடி வந்து, `மரியாதையா இடத்தை காலி பண்ணிக்க. இல்லைன்னா, புல்டோஸர் வெச்சு கடையை தரைமட்டமாக்கிடுவோம்'னு மிரட்டுறாங்க. ஆனா, நான் அசர மாட்டேன். `இருக்கிறனவனுக்கு ஒரு இடம்னா, இல்லாதவனுக்கு ஆயிரம் இடம்'னு போயிட்டே இருப்பேன்.

`உங்களை நம்பி நான் பொறக்கலை. அரசாங்கம் இதைத் தரும், அதை வெச்சுப் பொழச்சுக்க'னு எங்க அப்பா என்னை இந்த உலகத்துல விட்டுவிட்டுப் போகலை. சாவுறவரைக்கும், என் கைகால்கள் இயங்கிறவரைக்கும் இந்தத் தையல் மெஷினை என் கால்கள் மிதிச்சுக்கிட்டே இருக்கும். முடியாதப்போ நான் உயிரோடு இருக்க மாட்டேன்" என்று `சுரீர்' வார்த்தைகளில் முடிக்கிறார் குரல் கம்ம!


டிரெண்டிங் @ விகடன்