``நன்றாகப் படி ஹரிகரன்'' - அட்வைஸ் சொன்ன தலைமையாசிரியருக்கு மாணவனால் நடந்த விபரீதம்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ராமகிருஷ்ண மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரை அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிகரன் என்பவன் பிளேடு கத்தியால் தலைமை ஆசிரியரின் வயிற்றைப் பயங்கரமாகக் கிழித்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

திருப்பத்தூர் ராமகிருஷ்ண அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறார் பாபு. இவர் பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல் பாடமும் நடத்தி வருகிறார். இன்று பாபு வேதியியல் ஆய்வுக்கூடத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல் சம்பந்தமான செய்முறை வகுப்பு நடத்தியுள்ளார். அப்போது, சரியாகச் செய்முறை செய்யாத ஹரிகரன் என்ற மாணவனையும் சக மாணவர்களையும் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஹரிகரன் வேதியியல் ஆய்வுக்கூடத்திலேயே  தலைமை ஆசிரியர் பாபுவை பிளேடு கத்தியால் வயிற்றைக் கிழித்துவிட்டு பள்ளியை விட்டு தப்பியோடியுள்ளான்.

இது சம்பந்தமாகப் பள்ளி மாணவர்கள் கூறுகையில், பாபு சார் ரொம்ப ஸ்டிட்டானவர். மாணவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கண்டிப்பான முறையில் நடந்துகொள்வார். ஹரிகரன் மற்றும் அவனுடன் இருக்கும் நான்கு ஐந்து மாணவர்கள் சரியாகப் பாடத்தைக் கவனிப்பதில்லை. வேதியியல் செயல்முறை வகுப்பில் முறையாகச் செய்முறை பயிற்சி செய்வதில்லை என ஹரிகரனைத் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் கண்டித்து வந்துள்ளார் பாபு. அதுமட்டுமின்றி தனிப்பட்ட முறையில் ஹரிகரனை நன்றாகப் படிக்கச் சொல்லி தினமும் கண்டித்து வந்துள்ளார். இதைப் புரிந்துகொள்ளாமல் ஆத்திரமடைந்த ஹரிகரன் இன்று செய்முறை வகுப்பின்போது ஆய்வுக்கூடத்திலேயே வைத்து தலைமை ஆசிரியர் பாபுவை பிளேடு கத்தியால் கிழித்துவிட்டு தப்பியுள்ளான். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த ஆசிரியரைப் பார்த்து சக மாணவர்கள் கூச்சல் போட்டுள்ளனர். இதை அறிந்த சக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரை மீட்டு ஆம்புலன்ஸில் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தப்பியோடிய ஹரிகரனை போலீஸ் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதன் பின்பே ஆசிரியரைக் குத்தியதின் முழு விவரம் தெரியவரும் எனப் போலீஸ் தரப்பிலும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன் தலைமை ஆசிரியரைத் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!