வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (05/02/2018)

கடைசி தொடர்பு:19:00 (05/02/2018)

``அந்த நாளை இந்த அரசே குறிக்கட்டும்'' - கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் குமுறல்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்துக்கு உட்பட்டது ஜி.உசிலம்பட்டி அருகில் உள்ளது ராமலிங்கபுரம் கிராமம். இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வாழ்ந்துவருகின்றனர். இந்த நிலையில், எம்.ஜி.ஆர் காலனியில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதாகக் கூறி அந்தப் பகுதி கிராம மக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது நம்மிடம் பேசிய கருத்தம்மா, ``எத்தனை ஆண்டுகள்தான் நாங்கள் போராடுவது என்று தெரியவில்லை. குடிக்க நல்ல தண்ணீர் இல்லை. சாலை இல்லை. தெருவிளக்கு இல்லை. இதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடி ஓய்ந்துபோய்விட்டோம். வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து குளிக்ககூட தண்ணீர் இல்லை. அரசாங்கங்கள் இலவசமாக அரிசி கொடுக்கிறது. அதைச் சமைத்துச் சாப்பிடக்கூட தண்ணீர் இல்லை. அந்த அரிசியை வறுத்தா சாப்பிடுவது. இதுவரை பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தோம். இதுவரை எந்தப் பலனும் இல்லை. மனு கொடுக்கும்போதெல்லாம் அதிகாரிகள் எங்கள் கிராமத்துக்கு வந்து பார்ப்பார்கள். நாங்கள் எங்கள் பிரச்னைகளைக் கூறுவோம். அவ்வளவுதான்.

அடுத்து அந்தப் பக்கம்கூட வரமாட்டார்கள். இதோடு சரி, இனியும் எங்கள் பிரச்னை தீரவில்லை என்றால், கிராமத்தைவிட்டு வெளியேற வேண்டியதுதான். அந்த நாளை இந்த அரசே குறிக்கட்டும்`` என்று வேதனை தெரிவித்தார். ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம பஞ்சாயத்து) எபியிடம் போனில் பேசியபோது, ``தண்ணீர் பிரச்னை குறித்து தற்போதுதான் என் கவனத்துக்கு வந்துள்ளது. உடனே கிராமத்துக்குச் சென்று ஆய்வு செய்கிறேன். மேலும், கிராமத்துக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்`` என்று உறுதியளித்தார்.