வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (05/02/2018)

கடைசி தொடர்பு:20:01 (05/02/2018)

`இன்னும் பல அனிதாக்களை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும்' - நீட் தேர்வுக்கு எதிராகக் கொந்தளித்த அனைத்துக் கட்சியினர்

ஓர் அனிதாவை இழந்தது போதும் இன்னொரு அனிதாவை இழக்க வேண்டாம். கையாளாகாத மாநில அரசுகளைக் கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் அனைத்துக் கட்சிகள் சார்பில் அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர் அண்ணா சிலை அருகில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ- மாணவிகளைப் பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஜனநாய உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை மத்திய அரசு கடந்தாண்டு கொண்டு வந்தது. இதனால், தகுதி உள்ள மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவ- மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட  கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட ம.தி.மு.க மாவட்டத் துணைச் செயலாளர். வாரணவாசி ராஜேந்திரனிடம் பேசினோம். ``நீட் தேர்வு என்ற ஒற்றை வார்த்தை கடந்த ஓர் ஆண்டாகவே தமிழ்நாட்டையே அதிரவைத்துக்கொண்டிருக்கிறது. நீட் தேர்வை எதிர்த்து அரசுதான் போர்க்கொடி தூக்க வேண்டும். ஆனால், அரியலூர் மாணவி அனிதா ஒற்றை ஆளாக உச்ச நீதிமன்றத்தை நாடினார். அதில் தோல்வியுற்றதால் மனவேதனையில் அவள் உயிரை மாய்த்துக்கொண்டார். இந்தச் சூழ்நிலையில், இந்த ஆண்டும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின்படி  தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது, முற்றிலும் எதிரானது. இன்னும் பல கிராமங்களில் நீட் தேர்வு என்றால் என்ன என்பதே தெரியாமல் இருக்கிறார்கள் மாணவர்கள். கடந்த ஆண்டே நீட் தேர்வைக் கொண்டுவந்தது மத்திய அரசு. இன்றளவு வரையிலும் மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதைத் தெளிவு படுத்த வேண்டும். நீட் தேர்வு என்றால் என்ன அதை எப்படி எதிர்கொள்ளவது என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தாமல் இவர்களின் பதவி சண்டையைப் போடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இல்லை மத்திய அரசை எதிர்த்துப் பேசமுடியாத வக்கற்ற அரசாக இருப்பதால், நீட் தேர்வை பற்றி மாணர்களுக்கு போதிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். இல்லை ஓர் அனிதாவைப்போல் இன்னும் பல அனிதாக்களை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும்'' என்று முடித்தார்.