'விவரம் தெரியாத பிஞ்சுக் குழந்தை'- கலெக்டர் ஆபீஸை முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர் ஆவேசம்

தூத்துக்குடி மாவட்டம் கீழத்தட்டப்பாறை கிராமத்தில் 6 வயதுச் சிறுமியை 14 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்து தீயிட்டு கொலை செய்துள்ளான். இந்த சம்பவத்தில் இறந்து போன சிறுமி சிவகாமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கிராம மக்களுடன் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை  முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கீழத்தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகள் சிவகாமி. 6 வயதான இச்சிறுமி வீட்டு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தாள். கடந்த 1 ம் தேதி வழக்கம்போல அங்கன்வாடி மையத்திலிருந்து வீட்டிற்கு வந்த சிறுமி, அதே தெருவில் உள்ள ஒரு வீட்டு விசேஷத்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, அப்பா அழைப்பதாகச் சொல்லி சிறுமியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட போது சத்தம் போட்டு அலறிய சிறுமி சிவகாமியின் கழுத்தை சால்வையால் இறுக்கி, நியூஸ் பேப்பரால் உடலை மூடி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான் அதே ஊரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கண்ணன். விசாரணையில் அச்சிறுவன்தான் குற்றவாளி என்பது உறுதியானது. சிறுவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இறந்து போன சிறுமி சிவகாமியின் குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினருடன் கிராம மக்களும் இணைந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாதர் அனைத்திந்திய ஜனநாயக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பூமயில், “விவரம் தெரியாத பிஞ்சுக் குழந்தையான சிவகாமியை மனசாட்சியே இல்லாமல் பாலியல் துன்புறுத்துலுக்கு உட்படுத்தி வன்புணர்வு செய்து கொடூரமான முறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொலை செய்த சிறுவன் கொடூரன் கண்ணனுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும். எந்த வழியைப் பயன்படுத்தியும் ஜாமீனில் வெளிவரக் கூடாது. ஜாமீன் வழங்கப்படவும் கூடாது. சிறுமி சிவகாமியை இழந்து வாடும் ஏழைக் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் அரசு, நிவாரணம் வழங்க வேண்டும். இது குறித்து ஆட்சியர் முதல் முதலமைச்சர் தனிப்பிரிவு வரை மனு அளித்துள்ளோம்” என்றார்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!