`எங்கள் இடத்தை விட்டு நாங்கள் செல்ல மாட்டோம்!` - கலெக்டரிடம் முறையிட்ட மலைவாழ் மக்கள்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வடக்குமலை பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் இன்று காலை தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு ஒன்றைக் கொடுத்து கலெக்டரிடம் முறையிட்டனர். அப்போது பேசிய அவர்கள், ''தலைமுறை தலைமுறையாக நாங்கள் போடி வடக்குமலைப் பகுதியில் வசித்து வருகிறோம். அத்தியூத்து, பொரியாத்துக்கோம்பை, ஊத்தாம்பாறை, பிச்சங்கரை, கொட்டக்குடி, குரங்கனி வடக்கு, குரங்கனி தெற்கு, கழுகு மலை, முந்தல், முத்துக்கோம்பை, முசப்பாறை, அருங்குளம், உலக்குருட்டி, காகம்பாறை, அகமலை ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்துவருகிறார்கள்.

இந்நிலையில், இன்று புதிதாக வந்திருக்கும் தேனி ரேன்ஜர் மோகன்குமார், உடனே இடத்தை காலி செய்துவிட வேண்டும் என்று எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்துப் பேசினோம். அவர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார். தொடர்ந்து இன்று கலெக்டரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம். எங்கள் இடத்தை விட்டு நாங்கள் செல்ல மாட்டோம். தொடர்ந்து போராடுவோம்'' என்றனர்.

தேனி ரேன்ஜர் மோகன்குமாரிடம் போனில் பேசியபோது, ''வனத்துறை மக்களுக்கு என்றுமே எதிரி இல்லை. வனத்தில் வசிப்பவர்கள் தங்கள் நிலங்களை விற்கவோ, மற்றவர்கள் அனுபவிக்க அனுமதிக்கவோ விடக்கூடாது. அதனை மீறும் வகையில் அம்மக்கள் செயல்பட்டதாக எங்கள் கவனத்துக்கு வந்தது. அதன் அடிப்படையில்தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் வேறொன்றும் இல்லை`` என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!