''தங்கக் கவசம் இருக்கு… ஆனால் இல்லை…!'' - தீராத போடி சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரச்னை

தேனி மாவட்டம், போடியில் உள்ளது புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில். 70 களில் போடி மக்கள் சேர்ந்து முருகனுக்காக ஒரு தங்கக் கவசம் செய்தனர். பின்னாளில் அந்தத் தங்கக் கவசத்தைக் காணவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். அதனை நாம் செய்தியாக வெளியிட்டோம். அதன் அடிப்படையில், விசாரணை செய்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், போடி ஜமீந்தாரின் மனைவி மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், காணாமல் போன தங்கக் கவசம், சென்ட்ரல் பேங்க் லாக்கரில் உள்ளதாகத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கவசம் மீட்கப்பட்டது.

இந்நிலையில், பத்து வருடங்களுக்கு மேலாக முருகனுக்குச் சாத்தப்படாமல் இருந்த தங்கக் கவசமானது கடந்த தைப் பூச நாளில் முருகனுக்குச் சாத்தப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், இன்று கலெக்டரை சந்தித்த கிராம மக்கள், தங்க கவசத்தை முருகனுக்குச் சாத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உடனே நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார். மேலும், தங்கக் கவசம் சாத்தப்படும் போதுதான் நேரில் வருவதாகவும் கூறினார். வெளியே வந்த மக்கள் பிரதிநிதிகளிடம் பேசியபோது, ``பல்வேறு போராட்டங்கள் நடத்தித்தான் தங்கக் கவசத்தைக் கண்டுபிடித்து மீட்டோம். இருந்தபோதும், தங்கக் கவசம் இருக்கு… ஆனால் இல்லை… கதையாகத்தான் இருக்கிறது. கலெக்டர் உறுதியளித்திருக்கிறார். நிச்சயம் செய்து கொடுப்பார் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது`` என்றனர். போடி சுப்பிரமணிய சுவாமி கோயில் தங்கக் கவசம் பல ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டும் இன்றும் பிரச்னைகள் தொடர்ந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!