வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (05/02/2018)

கடைசி தொடர்பு:22:00 (05/02/2018)

'126 ஸ்கேன் சென்டர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்'- அமைச்சர் விஜயபாஸ்கர்  தகவல்

"தாயின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று தெரிவிப்பது குற்றம். அப்படிச் செய்த 126 ஸ்கேன் சென்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தமிழக சுகாதாரத் துறைத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூரில் முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம், சுகாதாரத்துறை சார்பில் இன்று (05.02.2018) நடைபெற்றது. இந்த முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் அம்மா ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 33 லட்சம் மக்கள் பயன்பெற்றுள்ளனர். இந்தத் திட்டத்தில் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு 25 மருத்துவப் பரிசோதனைகளை எந்தவிதக் கட்டணங்களும் வசூலிக்காமல் பரிசோதித்து, அதன் ரிப்போர்ட் இலவசமாகத் தரப்படுகிறது. தமிழகம் முழுவதும் அரசுப் பதிவு பெற்ற 6,500 ஸ்கேன் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன.
கருவில் உள்ள சிசு ஆணா... பெண்ணா? என்பது குறித்து தகவல்தெரிவிக்கக் கூடாது என்று அரசு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனை மீறுவோர் மீதும் சம்பந்தப்பட்ட ஸ்கேன் சென்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அரசு தீவிரக் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளது. தற்போது அப்படிப்பட்ட முறைகேட்டில் ஈடுபட்ட 126 ஸ்கேன் சென்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் தரப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்யபட்டு ஸ்கேன் சென்டர் சீல் வைக்கப்பட்டுள்ளது. இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக பரம்பூர் சௌந்தரநாயகி அம்பிகா கும்பாபிஷேகத்திலும் அமைச்சர் கலந்துகொண்டார். அவருடன் புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியர் சு.கணேசும் நிகழ்வுகளில் பங்கேற்றார். முகாமில் கலெக்டர் கணேஷ், பொது சுகாதாரத்துறை இயக்குநர் பரணிதரன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.