“பீடி மடக்கச் சொன்னாங்க. நான் சிலம்பத்தை தூக்கிட்டேன்” சிலம்பத்தில் அசத்தும் மாணவிகள்! | They want me to roll beedi...i want to rule the world...Girls rocking in Silambam.

வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (05/02/2018)

கடைசி தொடர்பு:19:28 (05/02/2018)

“பீடி மடக்கச் சொன்னாங்க. நான் சிலம்பத்தை தூக்கிட்டேன்” சிலம்பத்தில் அசத்தும் மாணவிகள்!

திகாலை ஆறு மணி. அம்பாசமுத்திரம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அந்த மைதான வளாகத்தைச் சுற்றிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கையில் சிலம்பத்தை ஏந்தியபடியே ஓடிக்கொண்டிருந்தார்கள். கால்களில் அணிந்திருக்கும் பூட்சுகளின் சத்தம் அந்தத் தார்ச்சாலையை அதிரவைக்க, ஓரிரு நிமிடங்களில் மைதானத்தில் நுழைந்தார்கள். பயிற்சியாளர் ரமேஷ் குரல் கொடுக்க, அடுத்த கணமே கால்கள் ஓட்டத்தை நிறுத்தின. மைதானம் அமைதியானது. ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நின்றார்கள். அடுத்த ஆர்டர் வந்தது. எறும்புகள்போல அனைவரும் இடம்பெயர்கிறார்கள். ஆளுக்கொரு பொசிஷன். சிறுவர்கள் ஒருபுறமும், மாணவிகள் மற்றொரு புறமும் இடம் மாறினார்கள். எல்லாம் 30 விநாடிகளில் நடந்தது. அடுத்த 10 விநாடியில் ஒரு மாணவி மட்டும் முன்னால் வந்து ஆரம்பிக்க, அனைவர் கையிலும் உள்ள சிலம்பம் இடது வலமாக மாறி தரையில் வணக்கம் வைக்கிறது. அடுத்தடுத்த நிமிடங்களில் அந்தச் சிலம்பம் அங்குள்ளவர்களின் கைகளில் தாறுமாறாகச் சுழல்கிறது. 

பரேடு பயிற்சியில் மாணவிகள்

சிலம்பம் மட்டுமல்ல, என்.சி.சி மாணவர்களுக்குத் தரப்படும் பரேடு வகுப்புகளும் நடக்கின்றன. கயிறு ஏறுவது, உயரம் தாண்டுவது, தண்டால் எடுப்பது என அனைத்திலும் பசங்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை என அங்கிருக்கும் ஒவ்வொரு பெண் பிள்ளையும் நிரூபிக்கிறார்கள். 

“என் பெயர் சங்கீதா. 11-ம் வகுப்புப் படிக்கும்போது என் தோழி, 'என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் 'சுவாசம் டிரஸ்ட்' ல ஃப்ரீயா டியூஷன் சொல்லிக்கொடுக்கிறாங்க. நீயும் வா'னு கூப்பிட்டா. ஆரம்பத்தில் டியூஷன் படிக்கவே வந்தேன். அப்புறம்தான் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து சிலம்பம் கத்துக்க முடிவுபண்ணினோம். காரணம், எங்க டியூஷன்ல படிக்குற பசங்க சனி, ஞாயிறுகளில் பரேடு கிளாஸுக்குப் போவாங்க. அதைப் பார்த்ததும், 'பசங்க மட்டும்தான் பண்ண முடியுமா? ஏன் நம்மால முடியாதா?'னு ஒரு கேள்வி. ரமேஷ் அண்ணாக்கிட்ட சொன்னோம். சின்னதா ஒரு ஸ்மைல். அடுத்த நாளே சிலம்பத்தை கையில் எடுத்தோம். கிரவுண்டுக்குள்ள காலடி எடுத்துவெச்சோம்” என்கிறார் சங்கீதா. 

பள்ளி மாணவியாக சிலம்பத்தைக் கையிலெடுத்த இவர், இப்போது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, அடுத்த தலைமுறைக்குச் சிலம்பம் சொல்லிக்கொடுக்கிறார். 

சிலம்பம் சுற்றும் மாணவிகள்

“சனிக்கிழமை சாயந்திரம் 5 மணிக்கு கிரவுண்டுக்கு வந்துடுவோம். முதல்ல எக்சர்சைஸ். அப்புறம் பரேடு நடக்கும். அது முடிஞ்சதுமே கயிறு ஏறணும். லாங்க் ஜம்ப், ஹைஜம்ப், தண்டால்னு எல்லாத்தையும் முடிக்க ஏழு மணி ஆகிடும். இருட்டுறதுக்குள்ளே கிளம்பி டியூஷன் போயிடுவோம். அடுத்த நாள் காலையில் 6 மணிக்குச் சிலம்பத்தோடு கிரவுண்டுக்கு வந்துடுவோம். சிலம்பம், கராத்தே முடிச்சுட்டு வீட்டுக்குப் போவோம். 

பரேடு வகுப்பு

எங்க ஊருல பொம்பளைப் பிள்ளைன்னாலே, சாயந்திர நேரத்தில் வீட்டுல உட்கார்ந்து பீடி மடக்கிக் கொடுத்து ஒத்தாசையா இருக்கணும்னுதான் நினைப்பாங்க. பையன்களோடு போட்டி போட்டுட்டு எல்லாத்தையும் செஞ்சுட முடியுமா? பரேடு பண்ணும்போது அடிபட்டுட்டா பொம்பளப் புள்ளையை எவன் கல்யாணம் பண்ணிப்பான்னு பேசுவாங்க. எனக்கு பரேடு பண்றதிலும் சிலம்பம் சுத்துறதிலும் வெறி. பொண்ணா பொறந்துட்டதுக்காக இதையெல்லாம் செய்யக் கூடாதுனு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. என் எதிர்கால லட்சியம் ஐ.பி.எஸ் ஆகறதுதான். என் ஃப்ரெண்ட்ஸ்கூட என்னை ஐ.பி.எஸ்னு கூப்பிட்டாத்தான் பிடிக்கும். உலகத்தை ஒரு கண்ணால மட்டும் பார்க்காதே. ரெண்டு கண்ணாலும் பார்' - இது பாரதிக்கு நிவேதிதா சொன்னது. நாட்டின் வளர்ச்சிக்கு ஆண் மட்டுமன்றி பெண் துணையும் வேணும். இந்த மாற்றத்தை நாங்க எங்க ஊருல கொண்டுவருவோம்” கம்பீரமாகவும் தன்னம்பிக்கையாவும் பேசுகிறார் பேச்சியம்மா. 

மாணவிகள் சிலம்பம் சுற்றுகிறார்கள்

“எங்க பொண்ணுங்களோட கனவுகளுக்கும் வளர்ச்சிக்கும் வீடே தடையா இருக்கு. இங்கே உள்ள பேரன்ட்ஸ்கிட்ட 'உங்க பையனை என்ன பண்ணப்போறீங்க?'னு கேட்டா, 'அவனை டாக்டருக்கோ, இன்ஜினீயருக்கோ படிக்கவைக்க போறோம்'னு சொல்வாங்க. பெண் பிள்ளைன்னா, 'ஒரு நல்ல பையனுக்குக் கல்யாணம் பண்ணிவைக்கணும்'னு சொல்வாங்க. ஆனா, நான் அப்படி இல்லை. பசங்களா இருக்கட்டும் பொண்ணுங்களா இருக்கட்டும். அவங்க என்ன ஆசப்படுறாங்களோ அதை செய்யச் சொல்லுவேன். இங்க வர்ற ஒவ்வொரு பிள்ளைக்கும் ராணுவ அதிகாரி ஆகணும், ஐ.பி.எஸ் ஆகணும்னு கனவுகள் இருக்கு. அதுக்காக அவங்களை மனதளவிலும் உடல் அளவிலும் தயார் பண்றேன். எங்க பசங்க மட்டுமில்லே, பொண்ணுங்களும் வீரத்தோடு வாழ்ந்து காட்டுறவங்களா இருப்பாங்க. மத்தவங்களுக்கு முன்னுதாரணமா இருப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” - அழுத்தமாகச் சொல்கிறார் ரமேஷ்.


டிரெண்டிங் @ விகடன்