வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (06/02/2018)

கடைசி தொடர்பு:11:46 (26/06/2018)

"செல்லூர் ராஜூ மாதிரியான ஸ்லீப்பர் செல் எங்களுக்குத் தேவை இல்லை!" - பொரிந்து தள்ளிய தங்கத்தமிழ்ச்செல்வன்


 

"எங்கள் அண்ணன் டி.டி.வி.தினகரன் அணிக்கு செல்லூர் ராஜூ போன்ற ஸ்லீப்பர் செல் தேவையே இல்லை"என்று பொரிந்து தள்ளினார் தங்கத்தமிழ்ச்செல்வன்.
புதுக்கோட்டை நகரில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவு அணியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொள்வதற்காக தினகரனின் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் வந்திருந்தார். அவர் தங்கியிருந்த விடுதியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.  

அவர் பேசும்போது, "உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதில் எங்களுக்கு பின்னடைவு கிடையாது. 'உள்ளாட்சி தேர்தலில் ஒரே சின்னமாக குக்கர் சின்னத்தை கொடுக்க வேண்டும்' என்று தான் வழக்கு தொடர்ந்தோம். ஆனால், உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் 'எங்களுக்கு அதிகாரம் கிடையாது. உள்ளாட்சி தேர்தல் என்பது மாநில தேர்தல் ஆணையத்தின் கட்டுபாட்டின் கீழ் உள்ளது' என்று கூறியுள்ளது.  குக்கர் சின்னம் கேட்டு நாங்கள் மீண்டும்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் எங்களது அணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி. ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. 


அமைச்சர் செல்லூர் ராஜூ அ.தி.மு.க உறுப்பினர் அட்டை இருந்தால் தான் அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்று பேசியுள்ளார். அவர் எங்களது ஸ்லீப்பர் செல் அல்ல. அவரை போன்றவர்கள் எங்கள் அணியில் இருந்தால் அது எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் வரவேண்டிய நேரத்தில்  அனைவரின் முன்னால் வந்து நின்று செய்ய வேண்டியவற்றை செய்வார்கள்.

தினகரன் சகோதர் பாஸ்கரன் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று தெரிவித்துள்ளது இந்த ஆண்டின் மிகப்பெரிய காமெடி.
ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்னர் தினகரன் குடும்பத்தில் இருந்தக் குழப்பங்கள் அவரது வெற்றிக்கு பின்னர் நீங்கி விட்டன. தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு பெருகி வருவதை உணர்ந்து அவரது குடும்பத்தினர் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை கொடுக்காமல் இருக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் குக்கர் சின்னம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். இல்லையென்றால் வேறு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். நாங்கள் எந்தச் சின்னத்தில் நின்றாலும் வெற்றி பெறுவோம். நாங்கள் எதிர்காலத்தில்தனிக்கட்சி தொடங்கினாலும் அ.தி.மு.க, இரட்டை இலைச் சின்னம் இரண்டும் எங்கள் பக்கம் வரும். ஊழல்இல்லாத ஆட்சி தினகரன் தலைமையில் அமையும்" என்றார்.