வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (06/02/2018)

கடைசி தொடர்பு:03:00 (06/02/2018)

ஜவ்வாக இழுக்கும் காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு!- நீதிபதி காட்டம்

காஞ்சிபுரம் மச்சேச பெருமாள் கோயில் கருவறையில் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட தேவநாதனை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. ஜூனியர் விகடன் மூலமாகத்தான் அவர்மீது புகார் அளிக்கப்பட்டது. அவர்மீது வழக்குப்பதிந்த பின்னர் வீடியோக்கள் வெளியாகி தமிழகத்தை அசிர்ச்சிக்குள்ளாக்கின. பிறகு தேவநாதன் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில்  மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு எட்டு ஆண்டுகளை கடந்தும் நீண்ண்ண்டு கொண்டே செல்கிறது.

தேவநாதன் செங்கல்பட்டு நீதிமன்றம்

செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது குறுக்கு விசாரணை செய்வதற்காக சாட்சிகள் வரவழைக்கப்பட்டனர். தேவநாதன் மீது புகார் அளித்த, அப்போது ஜூனியர் விகடன் ஆசிரியராக இருந்த அசோகன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் குறுக்கு விசாரணை செய்வதற்காக தேவநாதனின் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக ஜூனியர் வழக்கறிஞர் ஒருவர் ஆஜரானார். சீனியர் வழக்கறிஞருக்கு உடல்நிலை சரியில்லையென்பதால், வேறொரு தேதியில் வழக்கை ஒத்திவைக்குமாறு அவர் நீதிபதி வேல்முருகனிடம் அனுமதி கேட்டார்.

உடனே கோபமடைந்த நீதிபதி வேல்முருகன், “உங்கள் வழக்கறிஞருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை எப்படி நம்புவது? உண்மையாகவே உடல்நிலை சரியில்லை என்றாலும் வழக்கை தாமதப்படுத்துவது எப்படி நியாயமாகும்? சாட்சிகள் வராத அன்று, 'சாட்சிகள் ஓடிவிட்டார்கள்… இனி அவர்கள் வரமாட்டார்கள்' என எவ்வளவு பேசினீர்கள்? சாட்சி இங்கே வந்து நிற்கிறார்! உங்கள் வழக்கறிஞர் வராதது சரியா? நீங்கள் எத்தனை வருடமாக ப்ராக்டிஸ் பண்றீங்க? சீனியர் வழக்கறிஞர் என்றால் ஏன் பயப்படவேண்டும்? வழக்கறிஞர்கள் மீதும் கோர்ட் மீதும் உள்ள மரியாதையை நீங்கள் கெடுக்கிறீர்கள்” என கோபமாக எச்சரித்தார். அடுத்த முறை ஆஜராவது குறித்து தேவநாதனின் வழக்கறிஞர் எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்த பிறகு, அடுத்தமாதத்திக்கு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி.

ஜீன்ஸ் பேண்டும், கட்டம் போட்ட சட்டையுடனும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார் அர்ச்சகர் தேவநாதன். வழக்கு தள்ளிக்கொண்டே போவதை நினைத்து அவர் மகிழ்ச்சியாகவே வெளியேறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க