வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (06/02/2018)

கடைசி தொடர்பு:03:30 (06/02/2018)

கணவர் வீட்டில் அடி-உதை!- கலெக்டரிடம் பெண் கண்ணீர் புகார்

''நான் தலித் சமுதாயத்தை சேர்ந்த பெண் என்பதால் என் கூடவே வாழ்ந்து கொண்டு என் கணவர் விவகாரத்து நோட்டீஸ் அனுப்பினார்.  அதைக் கேட்பதற்காக என் கணவரின் வீட்டுக்கு  சென்ற போது சாதி பெயரை சொல்லி திட்டி கையை ஒடித்து கழுத்தை நெரித்து போட்டு விட்டார்கள்'' என்று கை, கழுத்தில் கட்டு போட்டுக் கொண்டு கலெக்டரை சந்திக்க வந்தார் ஒரு இளம் பெண்.

இதுபற்றி அந்தப் பெண்ணிடம் பேசிய போது, 'என் பேரு ஜூலி. எங்க அப்பா பேரு தீனதயாளன், எங்க அம்மா  லூர்துமேரி. என் கூட பிறந்தவர் ஒரு அக்கா. எங்க சொந்த ஊர் இராயவேலூர் அருகே உள்ள காட்பாடி. நான் நர்சிங் முடிச்சுட்டு சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிந்தேன். அப்போது எங்க அக்கா கணவரின் நண்பர் கார்திக் என்பவர் என்னிடம் அறிமுகம் ஆனார்.

நானும், கார்த்திக் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி 2013-ம் ஆண்டு இளம்பிள்ளை அருகே உள்ள சித்தர்கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். கூட்டுக் குடும்பமாக கார்த்திக் வீட்டில் வாழ்ந்து வந்தோம். கொஞ்ச நாட்களிலேயே கார்த்திக்கின்  அப்பா கோபி, அம்மா மல்லிகா ஆகியோர் என்னை சாதி பெயரை சொல்லி திட்டி அடித்தார்கள்.

அதையடுத்து நானும் என் கணவர் கார்த்தியும் செவ்வாய்ப்பேட்டை சண்முகா நகரில் தனிக் குடித்தனமாக  வாழ்ந்து வந்தோம். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் இருந்து தபேதார் எங்க வீட்டுக்கு வந்தார். யார் ஜூலி என்று கேட்டு உங்க வீட்டுக்காரர் விவகாரத்து கேட்டு உனக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக கூறினார். அப்போது என் வீட்டுக்காரர் என்னோடு இருப்பதை பார்த்து தபேதார், ''யோவ்... நீ பெரிய ஆளு. நோட்டீஸும் அனுப்பிட்டு அந்த பொண்ணு கூடவே இருக்க. சொல்லிட்டு போனார்.

அன்று மாலை வீட்டை விட்டு போன கணவர் மீண்டும் வரவில்லை. இரவு போனில் இனி நான் உன்னோடு வாழ விரும்பம் இல்லை. நான் அங்கு வர மாட்டேன். அதையடுத்து நான் அவுங்க அப்பா வீட்டிற்கு சென்று என் கணவரிடம் பேச சென்றேன். என் கணவரின் அப்பா கோபி, அம்மா மல்லிகா, நார்த்தனாள் மீனா ஆகியோர் என்னை சாதி பெயரை சொல்லி கெட்ட கெட்ட வார்த்தைகளில் பேசி தாக்கிவிட்டனர். அப்போது என் கணவர் பார்த்துக் கொண்டே இருந்தார். அதனால் இனி அவரோடு வாழ விரும்பம் இல்லை. ஆனால் என்னை அடித்து துன்புறுத்தியதற்கு நீதி வேண்டும்'' என்றார்.