ஊதிய உயர்வுப் பிரச்னை! மின்வாரிய ஊழியர்கள் மீண்டும் போராட்டம் அறிவிப்பு

பிப்ரவரி 16-ம் தேதி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக மின்வாரிய ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

மின்சார வாரியம்


தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்குக் கடந்த 2015- ம் ஆண்டு டிசம்பர் முதல் வழங்கப்படவேண்டிய ஊதிய உயர்வும், நிலுவைத் தொகையும் இதுவரை வழங்கப்படாத நிலை உள்ளது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஊதிய உயர்வுக் கணக்கீட்டுக் காரணிகள் 2.57 விழுக்காடு என மின்வாரியம் ஒத்துக்கொண்ட நிலையில், அதை நிறைவேற்றுவதில் தமிழக அரசின் நிதித்துறை தயக்கம் காட்டுவதோடு, ஒத்துக்கொண்ட ஊதிய உயர்வுக்காரணியை நிராகரித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, மின்வாரியத் தொழிற்சங்கங்கள் கடந்த 23-1-2018 அன்று வேலை நிறுத்தம் அறிவித்திருந்தனர். தொழிலாளர்நல ஆணையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக அது ஒத்திவைக்கப்பட்டது.

பிப்ரவரி 12-ம் தேதி, ஊதியம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என அப்போது சொல்லப்பட்டது. இதற்கிடையே, கடந்த மாதம் 31-ம் தேதி மின்வாரிய ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க, ஊழியர் சங்கங்கள் கேட்கும் 2.57 காரணி ஊதிய உயர்வை வழங்க முடியாது; 2.40 காரணி அளவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று நிதித்துறைச் செயலாளர் மின்வாரியத்தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இது, மின்வாரியத் தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பிப்ரவரி 12-ம் தேதி இறுதி முடிவு எட்டப்படவில்லையெனில், 16-ம் தேதி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தமிழ்நாடு மின்வாரிய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!