மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் - அதிபர் யாமீன் அதிரடி!

அப்துல்லா யாமீன் - மாலத்தீவு அதிபர்மாலத்தீவில், கடந்த இருவார காலமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாவுக்கு பெயர்போன மாலத்தீவில், அரசியல் குழப்பங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன. மாலத்தீவு முற்போக்குக் கட்சித் தலைவர் அப்துல்லா யாமீன் அந்நாட்டு அதிபராக உள்ளார்.

 சமீபத்தில் அவரது கட்சியைச் சேர்ந்த 12 பேர், யாமீனுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியதால், அவர் பெரும்பான்மை இழந்து, எதிர்க்கட்சிகளின் பலம் அதிகரித்தது. ஆட்சிக் கவிழ்ப்பைத் தடுக்கும் நோக்கில், 12 பேரையும் தகுதிநீக்கம் செய்தார் யாமீன். இதையடுத்து, மாலத்தீவில் அரசியல் குழப்பம் அதிகரித்தது. 

அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்.பி.,க்களையும், தன் கட்சியினர் சிலரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்தார் யாமீன். மாலத்தீவு நாடாளுமன்றம் தற்காலிகமாக மூடப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலைசெய்யும்படியும், 12 எம்.பி.,க்கள் மீதான தகுதிநீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும், அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பளித்தது. ஆனால், அதை நிறைவேற்ற அதிபர் யாமீன் மறுத்துவிட்டார்.

அதனால், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதிபரின் நடவடிக்கைகளுக்குப் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில், அதிபருக்கு எதிரான வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்திவருகிறது.

இதற்கிடையே மாலத்தீவு அட்டர்னி ஜெனரல் முகமது அனில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிபருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தால், அது சட்டவிரோதமாகும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். அதனால், அதிபரைக் கைதுசெய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அதை நிறைவேற்றக் கூடாது என போலீஸ் மற்றும் ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அதிபருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, மாலத்தீவில் 15 நாள்களுக்கு அவசர நிலையைப் பிரகடனப்படுத்த, அதிரடியாக  உத்தரவு பிறப்பித்துள்ளார் அதிபர் யாமீன். அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!