வெளியிடப்பட்ட நேரம்: 09:18 (06/02/2018)

கடைசி தொடர்பு:09:18 (06/02/2018)

“டாக்டர் வீட்டுப்பாடம் செய்யாமல் வரலாமா?” வகுப்பில் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் #CelebrateGovtSchool

அரசுப் பள்ளி

பாடங்களை மனப்பாடமாகக் கற்காமல், அர்த்தம் புரிந்துகொண்டு படிக்கும்போது எந்நாளும் மாணவரின் மனதிலிருந்து நீங்காது. இதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பே பிரதானமானதாக இருக்க வேண்டும். அவர்கள் முன்வந்து புதிய முறையில் பாடங்களைக் கற்பிக்கும்போது, சோர்வில்லாமல் மாணவர்கள் கற்பதற்கு உதவியாக இருக்கும். தமிழ்நாட்டு அரசுப் பள்ளி ஆசிரியர்களில் பலரும் பல வித்தியாசமான அணுகுமுறைகளில் பாடங்களை, மாணவர்களுக்குக் கொண்டுசேர்க்கின்றனர். ஆசிரியர் ராமநாதனும் அவர்களில் ஒருவர். 

பேராவூரணி, பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ராமநாதன். இவரின் சொந்த ஊர் ஊட்டி. ஆனால், தனக்குப் பணி கிடைத்த பெரிய தெற்குக்காடு பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாகப் பணி மாறுதல் கேட்காமல் பணியாற்றி வருகிறார். அதற்கான காரணத்துடன் தன் பணியைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிறார். 

“இந்தக் கிராமத்து மாணவர்களின் கள்ளம் கபடமில்லாத குணம் எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. ஒவ்வொரு வருடமும் புதிய மாணவர்கள் வருவதை, புதிய நண்பர்கள் கிடைப்பதாக நினைக்கிறேன். மாணவர்களுக்கு, பாடங்களை வகுப்பறைக்குள்ளேயே உட்காரச் செய்து சொல்லிக்கொடுப்பதைவிட, பாடம் தொடர்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று விளக்கினால், மாணவர்கள் எளிதாக அவற்றைப் புரிந்துகொள்வார்கள். 

உதாரணமாக, தஞ்சாவூர் பெரிய கோவிலைப் பற்றிய பாடத்திற்கு, மாணவர்களை அந்தக் கோயிலுக்கே அழைத்துச்சென்றுவிட்டேன். அங்கே சென்றதும் அந்தப் பிரமாண்ட கோயிலைப் பார்த்ததும் மாணவர்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் முளைத்தன. அவற்றைப் பிரகாரத்தில் அமர்ந்து உரையாடித் தீர்த்து வைத்தேன். அடுத்த நாள் பள்ளிக்குச் சென்று தஞ்சைக் கோவிலைப் பற்றிய பாடத்தை நான் நடத்துவதை அவர்கள் மனக்கண்ணில் காட்சிகளாக விரித்துப் பார்த்துக்கொண்டனர். இனி எப்போது தேர்வு வைத்தாலும் மிகச் சரியான பதிலை அவர்கள் எழுதுவர். புதிய இடத்தைத் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியும் அவர்களுக்குக் கிடைத்தது. 

இதேபோல, வயல், மரங்கள், நீர், காற்று தொடர்பான பாடங்களுக்கு, அதற்கேற்ற இடங்களுக்கு அழைத்துச்சென்று நடத்தினேன். எல்லாப் பாடங்களுக்கும் நேரில் அழைத்துச்சென்று காட்ட முடியாதுதான். சில பாடங்களை வேறு விதமாகவும் நடத்தினேன். அறிவியலில் உடல் உறுப்புகள் தொடர்பான பாடத்துக்கு ஆட்டின் உறுப்புகளை வாங்கிவந்து காட்டினேன். சில மாணவர்கள் அவற்றைப் பார்த்து பயப்படக்கூடும் என்பதால் முதன்நாளே அந்தப் பாகத்தின் படத்தை வரைந்து, 'இதுபோன்ற ஒன்றைத்தான் நாளை வாங்கி வரப்போகிறேன்' என்பேன். தயக்கமோ, அச்சமோ இருக்கும் மாணவர்கள் உள்ளனரா எனச் சோதித்துக்கொண்டே அடுத்த நாள் உறுப்புகளை வாங்கிவருவேன். மாணவர்கள் ஆர்வத்துடன் அந்த உறுப்புகளை, தன் கைகளில் வாங்கி, உற்றுப் பார்ப்பார்கள். அதன்பின் அவர்கள் அந்த உறுப்பை, படம் வரையும்போது மிகத் தெளிவாக வரைவார்கள். 

அரசுப் பள்ளி'

மற்ற பள்ளிகளில் இல்லாத ஒரு பழக்கத்தை, எங்கள் பள்ளியில் கடைப்பிடித்துவருகிறோம். ஒரு மாணவர் பள்ளியில் சேரும்போதே, 'நீ எதிர்க்காலத்தில் எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறாய்?' எனக் கேட்போம். அதற்கு மாணவர்கள், 'டாக்டர்' 'போலீஸ், 'வக்கீல்' என, தங்களின் விருப்பத்தைக் கூறுவர். உடனே,  டாக்டராக விருப்பம் தெரித்த மாணவர் எனில் அந்த மாணவரை போட்டோ எடுத்து, கம்ப்யூட்டரில் அவரை டாக்டர்போல, மாற்றிவிடுவோம். அதுபோல வகுப்பின் அனைவருக்கும் மாற்றி, வரவேற்பறையில் ஒட்டி விடுவோம். அதைப் பார்க்கையில் மாணவர்கள் உற்சாகப்படுவர். மேலும், வீட்டுப்பாடம் எழுதாமல் வரும் மாணவரிடம் 'என்னப்பா, டாக்டரே இப்படி வீட்டுப்பாடம் எழுதாமல் வரலாமா?' எனக் கேட்போம். அவர் அடுத்த நாளிலிருந்து தவறாமல் வீட்டுப்பாடங்களை எழுதி வந்துவிடுவார். இதுபோல, அவர்களின் சிறு தவறுகளைத் திருத்த இது எங்களுக்கு மிகவும் உதவுகிறது. தலைமை ஆசிரியை வீரம்மாள் அவர்களின் வழிகாட்டலும் சக ஆசிரியர்களின் உதவியாலுமே இவற்றை நடைமுறைப்படுத்த முடிகிறது" என மகிழ்ச்சியோடு கூறுகிறார் ஆசிரியர் ராமநாதன். 

அரசுப் பள்ளிகளின் நல்ல முயற்சிகளை மனந்திறந்து பாராட்டுவோம். 


டிரெண்டிங் @ விகடன்