வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (06/02/2018)

கடைசி தொடர்பு:11:07 (06/02/2018)

``நாங்கள் சட்டமன்றத்துக்குள் நுழைந்தாலே ஆட்சி தானாகக் கலைந்துவிடும்!’’ - தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தினகரன் ஆதரவாளர்களின் கூட்டம் மாவட்டச் செயலாளர் உமாதேவன் தலைமையில், தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (5.2.2018) நடைபெற்றது. 

இதில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களுள் ஒருவரான தங்கத் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டார். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’சட்டப்பேரவைத் தலைவரால்  அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு எதிராக வந்தாலும், நாங்கள் மேல்முறையீடு செய்யப்போவதில்லை. மீண்டும் மேல்முறையீடு, விசாரணை எனக் காலதாமதமாகும். எனவே, 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்புவரும்போது,  நாங்கள் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெறுவோம்.

தமிழக அரசின் செயலற்ற தன்மையால் காவிரி நீர் தமிழ்நாட்டுக்குக் கிடைக்காது. தமிழக அரசை கலைப்பதற்கு நாங்கள் முயற்சி ஏதும் செய்யவில்லை. நாங்கள் 18 பேரும் சட்டமன்றத்துக்குள் நுழைந்தாலே, தானாகவே கலைந்துவிடும். அ.தி.மு.க-வில், தினகரன் தலைமையில் ஒரு புதிய அணியை உருவாக்க முயற்சி எடுத்துவருகிறோம். உள்ளாட்சித் தேர்தலில் மாநிலம் முழுவதும் எங்கள் அணியைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுவதற்கு ஏற்றவாறு, ஒரு சின்னத்தை ஒதுக்கித்தருமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைப்போம்’’ என்றார்.

இக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை சசிகலா, தினகரன் வழிகாட்டுதல்படி சிறப்பாகக் கொண்டாடுவது எனவும், ஆர்.கே. நகர் தேர்தலில் தினகரனை வெற்றிபெறச்செய்த தொகுதி மக்களுக்கும், பணியாற்றிய கட்சியினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்வது, தமிழகத்தின் வாழ்வாதாரங்களைப் பறித்து, தமிழக மக்களுக்குத் துரோகம் செய்துவரும் மத்திய அரசைக் கண்டித்தும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் ஈ.பி.எஸ்-ஒ.பி.எஸ் அரசைக் கண்டித்தும், முதல்வர் அரியணையில் தினகரனை அமர்த்துவதற்கான பணிசெய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க