வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (06/02/2018)

கடைசி தொடர்பு:11:59 (06/02/2018)

நீதிபதி எச்சரிக்கை எதிரொலி! மனுவை வாபஸ்பெற்றார் நித்தியானந்தா

மதுரை ஆதீன மடத்தின் 293-வது இளைய மடாதிபதியாக உரிமை கோருவதைத் திரும்பப்பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். 


மதுரை ஆதீன மடத்தின் 293-வது இளைய மடாதிபதியாக நித்தியானந்தா செயல்படத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜெகதலப்பிரதாபன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். பாலியல் புகார்களில் சிக்கி சிறை சென்றிருக்கும் நித்தியானந்தா, மதுரை ஆதீன மடத்தின் மடாதிபதியாகச் செயல்படுவது ஏற்புடையதல்ல என்றும், அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் விசாரித்துவருகிறார். 

இந்த வழக்கில், நித்தியானந்தா சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவில், மதுரை ஆதீன மடத்தின் 293-வது இளைய மடாதிபதியாகத் தான் பதவியேற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார். இதை, கடந்த செப்டம்பர் மாதம் விசாரித்த நீதிபதி, மடாதிபதியாக அறிவித்துக் கொண்டேன் என்பதை மாற்றி, புதிதாக 2018-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதிக்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த மனு, கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல்செய்ய நித்தியானந்தா தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, பதில் மனு தாக்கல்செய்ய அவகாசம் அளிக்கப்பட்டு, இந்த வழக்கு கடந்த 29-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் நித்தியானந்தா தரப்பில் மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. 

ஆனால், அந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி மகாதேவன், ``நீதிமன்றத்தை மதிக்காமல் 2,000 ஆண்டுகள் பழமையான ஆதீனத்தை நித்தியானந்தா கொச்சைப்படுத்துகிறார். நித்தியானந்தா ஆசிரமத்துக்கு எதிராகப் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதுதொடர்பாகப் பதில் மனு தாக்கல்செய்யாவிட்டால், கைதுசெய்து ஆஜர்படுத்த உத்தரவிட நேரிடும்’’ என்று எச்சரித்து, வழக்கை ஒத்திவைத்தார். இந்த வழக்கில், நித்தியானந்தா தரப்பில் இன்று பதில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில், மதுரை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதி என உரிமை கோருவதைத் திரும்பப் பெறுவதாகவும், அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.