வெளியிடப்பட்ட நேரம்: 12:28 (06/02/2018)

கடைசி தொடர்பு:12:37 (06/02/2018)

நகை ஒளித்துவைக்கும் மர்ம இடம்! அதிர்ந்து போன போலீஸ் டீம்... வேட்டையாடு,விளையாடு! பகுதி-21 


                            போலீஸ்

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

 கொள்ளையன் முண்டேல்பாஜூ காட்டிய விசிட்டிங் கார்டைப் பார்த்த இன்ஸ்பெக்டர் நவீன் சார் வழக்கம்போல முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல், 'ம்ம்ம் மிச்சத்தையும் சொல்லு' என்றார். முண்டேல்பாஜூ மீண்டும் பேச ஆரம்பித்தான். 'எங்களிடம் இருந்த கருவிகள், கொத்தனார் வேலைக்கு மட்டும் பயன்படக்கூடியவை என்பதால் போலீசார், எங்களைச் சந்தேகப்படவில்லை. நாங்கள் வைத்திருந்த விசிட்டிங் கார்டுகளைப் பார்த்ததும், மிகவும் மரியாதை காட்டினர்.

போலீஸ் குடியிருப்புகளில் திருடிவிட்டு, போலீஸ் ஸ்டேசன் பக்கமாகவே வந்து திருவொற்றியூரில் ரயில் பிடித்தும் பலமுறை ஆந்திராவுக்குப் போயிருக்கிறோம். கடற்கரைப் பக்கமாக (திருவான்மியூர்) இருந்த போலீஸ் குடியிருப்பில்  ஒருமுறை திருடிவிட்டு வரும் போதுதான் அங்கிருந்த போலீஸார் எங்களைப் பிடித்துக்கொண்டனர். எங்களிடம் கொத்தனார் வேலைக்குப் பயன்படும் கருவிகளோடு, ஏராளமான விசிட்டிங் கார்டுகளும் இருந்ததால் எங்களை அதிகம் விசாரிக்கவில்லை. நாங்கள் எங்கு திருடினாலும், முதல் வேலையாகத் திருடிய பொருள்கள் யாரிடமும் சிக்காத அளவுக்கு அதைப் பதுக்கிவிட்டுத்தான் அடுத்த வேலையைச் செய்வோம். இது எங்கள் தொழில் தர்மம்...

 நகை கொள்ளை கும்பலைத் தேடி பயணமான என்.நவீன் (ஓய்வு ஏ.சி.பி)நகைகளை வைக்க ஓர் இடம், பட்டுத் துணிகள், வெள்ளிப் பாத்திரங்களை வைக்க ஓர் இடம் என்று  திருடப் போகும்போதே, திருடிய பொருள்களை வைக்கும் இடத்தையும் பார்த்து வைத்துக்கொள்வோம். நகைகள் தவிர மற்ற பொருள்களைத் திருடிவிட்டு வரும் வழியில் குப்பை மேடான இடமாகப் பார்த்துப் புதைத்து விடுவோம். நகைகளை  மட்டும் எங்களிடமே வைத்துக்கொள்வோம், அதை யாராலும் கண்டு பிடிக்க முடியாது. வழியில் சிக்கல் இல்லையென்றால், புதைத்து வைத்த பொருள்களையும் கையோடு எடுத்துக்கொள்வோம், சிக்கல் இருந்தால் அப்படியே அதை விட்டுவிட்டு நகைகளுடன்  ஊருக்குப் போய் விடுவோம்.

சில நேரங்களில் புதைத்து வைத்த பொருள்களை வெளியில் எடுக்க முடியாத சூழ்நிலையும் அமைந்துவிடும். ஆந்திராவுக்குப் போனதும், சென்னையில் திருட்டுப் பொருள்களை வாங்கக்கூடிய ஆள்கள் யார் என்று விசாரித்துக்கொண்டு, சில வார இடைவெளிக்குப் பின், மீண்டும் சென்னைக்கு வருவோம். ஐந்நூறு ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து  மீன்பாடி ரிக்‌ஷாவை, நாள் வாடகைக்கு வாங்கி,  புதைத்து வைத்த பொருள்களை, அந்த ரிக்‌ஷாவில் ஏற்றிக்கொள்வோம்.

ரிக்‌ஷாவைப் போர்வை போட்டு மூடி, தள்ளிக்கொண்டே வருவோம். குறிப்பிட்ட நபர்களிடம் பொருள்களை விற்றதும்,  வாங்கிய இடத்திலேயே ரிக்‌ஷாவைக் கொண்டுபோய் விட்டுவிட்டு கொடுத்த அட்வான்ஸை திரும்ப வாங்கிக் கொள்வோம்.” என்றான். ` தங்க நகைகள் மட்டும் எங்களிடம்தான் இருக்கும், ஆனால், யாராலும் கண்டுபிடிக்க முடியாது... என்று முண்டேல்பாஜூ சொன்னானே ?' என எங்களுக்குள் கேள்வி சுழன்றுகொண்டேயிருந்தது. துணைக்கு வருகிற போலீஸாரின் 'ஃபேஸ் ரீடிங்'  கை அவ்வப்போது கவனிக்கிற காவல் அதிகாரிகள் எந்த வழக்கிலும் தோற்றதே இல்லை என்பதை ஒரு பாடமாகவே காலம் கற்றுத்தருகிறது எனலாம். நாங்கள் யோசித்து முடிப்பதற்குள் இன்ஸ்பெக்டர் நவீன்சார் கேட்டார். 'முண்டேல்பாஜூ, தங்க நகைகளை எங்கே வைப்பாய் ?'


தனிப்படை எஸ்.ஐ.ராஜ்குமார் (தற்போது இன்ஸ்பெக்டர்)ஒரு நிமிடம் யோசித்த முண்டேல்பாஜூ, 'சார், அவைகளை மல துவாரத்தில் பதுக்கி விடுவோம்' என்றதும் எங்களுக்கு ஷாக் அடித்ததுபோல் இருந்தது. கொள்ளையர்கள், கள்ளக் கடத்தல் ஆசாமிகளைப் பொறுத்தவரை, ரப்பர் டியூப்பில் நகைகளைத் திணித்து அதை விழுங்கி விடுவார்கள். தேவைப்படும்போது 'இனிமா' கொடுத்து  மல துவாரம் வழியாக, நகைகளை வெளியில் வர வைத்து விடுவார்கள். முண்டேல்பாஜூவோ, 'நேரடியாக மல துவாரத்தில் நகைகளைப் பதுக்கிக்கொள்வோம்' என்று சொன்னதை எங்களால் நம்பவும் முடியவில்லை, நம்பாமலும்  இருக்க முடியவில்லை. ‘அது எப்படிச் சாத்தியம் ?' என்று அவனை அதட்டுவதுபோல் நவீன் சார் கேட்டார்.

‘சார், நாங்கள் எப்போதுமே, நகைகளைப் பதுக்கி வைக்க  'காண்டம்'  வைத்திருப்போம். காண்டத்தில் நகைகளை நிரப்பி மல துவாரம் வழியாக உள்ளே திணித்து விடுவோம். முறையான மூச்சுப் பயிற்சி இதற்குத் தேவை. பயிற்சி இல்லாமல் இப்படிச் செய்தால் மூச்சு அடைத்து உயிருக்கு ஆபத்தாகப் போய்விடும். திருட்டுத் தொழிலை ஆரம்பித்தபோதே எங்கள் தொழில்குரு, மெள்ள, மெள்ள அதை எங்கள் பழக்கத்துக்குக் கொண்டு வந்தார். இப்படிச் செய்வதில் நிறைய வசதி இருக்கிறது. இனிமா கொடுத்துதான் நகைகளை  வெளியே எடுக்க முடியும் என்பது இல்லை. இரண்டு வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவிட்டு  அடிவயிற்றில்  கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் போதும், நகைகள் நிரப்பப்பட்ட  காண்டம் வெளியில் வந்து விடும். எப்போது நமக்குத்  தேவை என்றாலும், இந்த முறையில் நாம் எடுத்துக் கொள்ளலாம். மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்போது மட்டும் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்வோம். ரயிலைப் பிடித்து, அது தமிழ்நாட்டின் எல்லையைக் கடந்ததும் கழிப்பறைக்குப் போய் நகை நிரப்பிய காண்டத்தை வெளியில் எடுத்துக் கொள்வோம்.” என்றான். ` சரி, அதுபற்றி சென்னைக்குப் போன பிறகு விரிவாக உங்களிடம் கேட்டு வாங்கிக்கொள்கிறேன். இந்த முண்டேல் பாஜூவுக்கு நடுவிரலில் ஒருவிரலைக் காணவில்லை, சாதாரண கிருஷ்ணமூர்த்தியை தோட்டா கிருஷ்ணமூர்த்தி என்று கூப்பிடுகிறார்கள்...  இன்னும் சொல்லப்படாத நிறைய சமாசாரங்கள்  உங்ககிட்டே இருக்கு போலிருக்கே ?' என்றபடி  நவீன் சார், முகத்தை இறுக்கமாக்கினார்.
 (தொடரும்) 


டிரெண்டிங் @ விகடன்