பேருந்துக்கட்டண உயர்வு! - பிப்ரவரி 13-ல் அனைத்துக்கட்சியினர் கண்டனக் கூட்டம்

பேருந்துக்கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் வரும் 13-ம் தேதி கண்டனக் கூட்டம் நடத்த தி.மு.க தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 


தமிழகத்தில் பேருந்துக் கட்டணங்களை ஒரே இரவில் ரூ.3,600 கோடி அளவுக்கு உயர்த்திவிட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றன. ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களின் விளைவாக உயர்த்திய பேருந்துக் கட்டணத்தை ஓரளவுக்குக் குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், தமிழக அரசு குறைந்த அளவே கட்டணத்தைக் குறைத்துள்ளதாகவும் முழுமையான கட்டணக் குறைப்பை அறிவிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. 

பேருந்துக்கட்டண உயர்வு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அபுபக்கர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும், போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்குப் பின்னர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ‘‘பேருந்துக்கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் வரும் 13-ம் தேதி கண்டனக் கூட்டம் நடத்தப்படும். அந்தக் கூட்டங்களில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்வார்கள். முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை என்பதால் பேருந்துக்கட்டண உயர்வு குறித்து மட்டுமே விவாதித்தோம். கட்டண உயர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, கைதானவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!