துணைவேந்தர் கணபதி ஜாமீன் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்! | Bharathiar University VC Case: Coimbatore court asks tn government to reply

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (06/02/2018)

கடைசி தொடர்பு:13:45 (06/02/2018)

துணைவேந்தர் கணபதி ஜாமீன் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி, லஞ்சப் புகாரில் சிக்கி கைதாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதவிப் பேராசிரியர் பணிக்காக, அதே பல்கலைக்கழக வேதியியல் துறையில் பணிபுரியும் சுரேஷ் என்பவரிடமிருந்து, 30 லட்சம் லஞ்சம் பெற்றதற்காக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் கையும் களவுமாகச் சிக்கினார். அவருடன் சேர்த்து, வேதியியல் துறைப் பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சத்துக்கு, இடைத்தரகராகச் செயல்பட்ட குற்றத்துக்காக, தர்மராஜும் சிக்கினார். இது தவிர, தொலைதூரக் கல்வி இயக்குநர் மதிவாணன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்டடி சென்டர் அமைப்பதில் நடைபெற்ற ஊழல் மற்றும் துணைவேந்தர் கணபதிக்கு, கேஷ் டீலிங்கில் பக்கபலமாக இருந்தவர் மதிவாணன்தான். இவர், கணபதியின் உறவினராவார். இவர்களைத் த்விர, கடந்த 2016-ம் ஆண்டு, பேராசிரியர் பணி நியமனத்தில் நடந்த ஊழலில் தொடர்புள்ள மேலும் பல பேராசிரியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவர, துணைவேந்தர் கணபதி தரப்பில், மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஜான் மினோ முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கணபதி மற்றும் தர்மராஜ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க லஞ்ச ஒழிப்புப் போலீஸார் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, இதுதொடர்பாகத் தமிழக அரசு விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.