'அழுக்கு' குமார் கொடூரக் கொலை- சென்னை பிளாட்பாரத்தில் அதிர்ச்சி

கொலை

சென்னை கே.கே.நகரில், பிளாட்பாரத்தில் படுத்திருந்த அழுக்கு குமாரின் தலையில் கல்லைப்போட்டு கொலைசெய்தவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். 

 சென்னை கே.கே.நகர், அண்ணாரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் எதிரில் உள்ள பிளாட்பாரத்தில், தலையில் கல்லைப்போட்டு கொடூரமாக ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக, கே.கே.நகர் போலீஸாருக்குத் தகவல் வந்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுரளி, சம்பவ இடத்துக்குச் சென்று பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். கொலைசெய்யப்பட்டவர்குறித்து  நடத்திய முதல்கட்ட விசாரணையில்... இறந்தவர், ஜெயக்குமார் என்ற 'அழுக்கு' குமார் என்று தெரியவந்தது. இவர், குப்பைகளைப் பொறுக்குவது மற்றும் கட்டட கூலி வேலைக்குச் செல்வதுமாக இருப்பார் என்று தெரியவந்தது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, அழுக்கு குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்துவிட்டனர். குடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லாமல், பிளாட்பாரத்திலேயே தூங்கும் குமார், குளிக்காமல் அழுக்காக இருந்ததால் அவரை 'அழுக்கு' குமார் என்று அழைத்துள்ளனர். நேற்று இரவு, குமாருக்கும் அந்தப் பகுதியில் உள்ள பிச்சைகாரர்கள் சிலருக்குமிடையே, குடிபோதையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் ஆத்திரமடைந்த யாரோ சிலர், நடைபாதைக்குப் பயன்படுத்தும் டைல்ஸை குமாரின் தலையில் போட்டு கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். கொலை நடந்த இடத்தில் பேனா ஒன்றும் கிடக்கிறது. அதோடு, ரத்தக்கறை படிந்த டைல்ஸும் உள்ளது. அதைக் கைப்பற்றிய போலீஸார், அதில் உள்ள கைரேகையை ஆய்வு செய்துவருகின்றனர். கொலைச் சம்பவம் தொடர்பாக, அந்தப் பகுதியில் பிச்சை எடுப்பவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. அழுக்கு குமார் கொலை செய்யப்பட்ட தகவல், கோட்டூர்புரத்தில் உள்ள அவருடைய உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!