வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (06/02/2018)

கடைசி தொடர்பு:13:25 (06/02/2018)

போலீஸைப் பதறவைத்த செல்வகணபதி ஆதரவாளர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!

செல்வகணபதி வீட்டில் அவருடைய ஆட்களே பெட்ரோல்குண்டு வீசியுள்ள சம்பவம், போலீஸை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

தி.மு.க. மாநிலத் தேர்தல் குழுச் செயலாளர் செல்வகணபதி வீடு, சேலம் குமாரசாமிபட்டி ராம் நகரில் உள்ளது. அவருடைய வீட்டில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி, மர்ம நபர்களால் பெட்ரோல்குண்டு வீசப்பட்டு கார், பைக் இரண்டும் தீயில் கருகியது. அப்போது பேட்டியளித்த செல்வகணபதி, சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரனின் ஆட்கள்தான் இந்த வேலையைச் செய்திருப்பார்கள்'' என்று பகிரங்கமாகக் கூறிவந்தார். அதையடுத்து, அஸ்தம்பட்டியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவந்தது. இந்த விசாரணையில், செல்வகணபதியின் ஆட்களே மாட்டியிருக்கிறார்கள்.

சேலம் அஸ்தம்பட்டி காவல்துறை விசாரணையில், மல்லூர் ஏர்வாடியைச் சேர்ந்த மணி, வீரபாண்டி அரியானூர் பகுதியைச் சேர்ந்த மௌலீஸ்வரன் ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி, கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த தி.மு.க., முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் அருள்ராம், அதே பகுதியைச் சேர்ந்த அவருடைய நண்பர்கள் வரதராஜ், டிரைவர் மயில்சாமி, ஆகியோரை குற்றவாளிகளாக காவல்துறை கைதுசெய்துள்ளது.

அருள் ராமிடம் காவல்துறை விசாரித்தபோது, 'என்னை இளைஞரணி அமைப்பாளர் பதவியிலிருந்து பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் நீக்கினார். அதையடுத்து, ராஜேந்திரனைப் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில், செல்வகணபதி-ராஜேந்திரன் இடையே உள்ள பகையைப் பயன்படுத்திப் பழியை ராஜேந்திரன் மீது போட்டு அசிங்கப்படுத்த வேண்டும் என்று பெட்ரோல் குண்டுவீசினேன்' என்றார்.

ஆனால், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் தரப்பினர், 'செல்வகணபதி திட்டமிட்டு ராஜேந்திரனை அழிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான அரசியல் குணத்தால், தன்னோடு இருக்கும் அருள்ராமோடு கூடிப் பேசி, இந்தச் செயலைச் செய்திருக்கிறார்கள். அதை விளக்கமாக தலைமைக்குத் தெரியப்படுத்த இருக்கிறோம்' என்றார்கள்.