600 கடைகள் அடைப்பு; 300 ஆட்டோக்கள் இயங்கவில்லை! பொதுமக்களுக்காக நடந்த போராட்டம்

நெல்லை பேட்டை பகுதியில், கடந்த இரண்டு மாதங்களாக குண்டும்குழியுமாகக் கிடக்கும் சாலைகளைச் சீரமைக்கக் கோரியும் போக்குவரத்தை சரிப்படுத்த வலியுறுத்தியும் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. 

கடையடைப்பு

நெல்லையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நெல்லை மாநகரப் பகுதி மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றுவதற்காக, முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியிலிருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கொண்டுவரும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நெல்லை மக்களுக்கு நாள்தோறும் 250 மில்லியன் கனஅடி தண்ணீர் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுவரும் இந்தத் திட்டத்துக்கு, 8 மாத காலத்தில் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைய உள்ளன.

238 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்துக்காக, 81 கி.மீ தூரத்துக்கு குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதற்காக நெல்லை பேட்டை பகுதியில் குழாய்கள் பதித்துவருகிறார்கள். இந்தப் பணி, ஒரு மாதத்தில் முடிவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு மாதங்களாகியும் முடிவடையவில்லை. அதனால் போக்குவரத்து, மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டிருப்பதால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்துவருகிறார்கள். 

குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலைமை உள்ளது. நோயாளிகளால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக்கூட செல்லமுடியவில்லை. அதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், இன்று கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேட்டை பகுதி வர்த்தக சங்கத்தினரும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். மக்களுக்கு ஆதரவாக ஆட்டோக்களும் ஓடவில்லை. பேட்டை பகுதியில், 600 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 300 ஆட்டோக்கள் இயங்கவில்லை. அதனால், அப்பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!