ஏற்காட்டில் கி.பி 4-ம் நூற்றாண்டு முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

சேலம் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு மலைக் கிராமங்களில் வாழ்ந்த தொல்குடிகளின் பண்பாடு அறியும் பொருட்டு ஏற்காடு வரலாற்று ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஓவியர் மனோ, ராமகிருஷ்ணன், ஏற்காடு இளங்கோ, ஓவியர் ராஜகார்த்திக் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டதில், சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, 'ஏற்காடு மலை கிராமமான புளியங்கடை பகுதியில் பாயும் வாணியாற்றை இப்பகுதி மக்கள் கொள்ளுக்காட்டாறு என்றும், இப்பகுதியைக் கொள்ளுக்காடு என்றும் அழைக்கின்றனர். இந்த ஆற்றுப்படுக்கையை ஒட்டிய ராமசாமி என்பவரின் விளை நிலத்தில் இந்த முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஈமத்தாழி அல்லது முதுமக்கள் தாழியில், இறந்தவர்களைப் புதைக்கும் ஈமச்சின்னமாகும். இது நிலமட்டத்திலிருந்து 2 மீட்டர் ஆழமும், 158 செ.மீ., விட்டமும், கொண்டதாக அமைத்துள்ளனர். இதன் உட்பகுதி உடைந்து மண் மூடிய நிலையில் காணப்படுகிறது. இதன் வாய்ப்பகுதி 130 செ.மீ விட்டத்தில் 16 செ.மீ அகலமும், 18. செ.மீ., நீளம் மட்டும் கல்லால் மூடும்படியும், மற்ற பகுதி மண் மூடி சாதாரணமாகக் காட்சியளிப்பதால், இதை எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையிலும் அமைந்துள்ளனர்.

இந்த அமைப்பு, கி.பி 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈமச்சின்னமாகும். இதில் இறந்தவரோடு அவர் பயன்படுத்திய பொருள்களையும், இதில் வைத்துப் புதைப்பார்கள். இதன்மூலம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. அரசு முறையாக இப்பகுதியை ஆய்வுசெய்தால், இன்னும் அரிய வரலாற்றுத் தகவல்கள் வெளிவரும்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!