வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (06/02/2018)

கடைசி தொடர்பு:15:05 (06/02/2018)

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு புதிய மனு!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்வது தொடர்பாக சசிகலா தரப்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. சென்னை எழிலக வளாகத்தில் செயல்படும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன், அரசு அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், மருத்துவர்கள், ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஆஜராகித் தங்களின் வாக்குமூலங்களை அளித்துவருகின்றனர். அனைவரின் வாக்குமூலங்களும் பிரமாணப் பத்திரங்களும் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. 

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையும் இரண்டு சூட்கேஸ்கள் கொண்ட ஆவணங்களைத் தாக்கல் செய்தது. சசிகலா சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜராகி, ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதில், விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தவர்கள் அனைவரையும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. சசிகலா தரப்புக் கோரிக்கையை நிராகரித்த விசாரணை ஆணையம், பின்னர் அவர்களின் கோரிக்கையை ஏற்று சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த ஒப்புதல் அளித்தது. அதற்காக, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையையும் 15 நாள்களுக்கு ஆணையம் நிறுத்தி வைத்தது. 

இந்தநிலையில், விசாரணை ஆணையத்தின் முன்பு சசிகலா தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளித்த 22 பேரில் சாட்சியங்களுடன், அவர்கள் அளித்த ஆவணங்களையும் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான வீடியோ வெளியானதில் அலட்சியமாக இருந்ததாகக் குறிப்பிட்டிருப்பதையும் நீக்க வேண்டும் என்றும், அந்த ஆவணங்கள் கிடைத்த 10 நாள்களில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.