வெளியிடப்பட்ட நேரம்: 14:18 (06/02/2018)

கடைசி தொடர்பு:14:18 (06/02/2018)

“நீட் தேர்வை விலக்கவில்லையென்றால், காப்பி அடிக்க விடுவோம்!’’ - கே.என். நேரு கிண்டல்

கே.என்.நேரு

‘ ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கிடைக்கவில்லை எனில், மாணவர்களைக் காப்பியடிக்கவிடுவோம்’ என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருப்பது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

நீட் தேர்வுக்கு எதிராகத் திராவிடர் கழகம் சார்பில் அனைத்துக் கட்சிகள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம், நேற்று திருச்சி அண்ணா சிலை முன்பு  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ‘நீட் தேர்வு தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை...’,  ‘வெல்க... வெல்க... வெல்கவே... சமூக நீதி வெல்கவே...’, ‘நீட் விதிவிலக்கு தேவை’ என தி.மு.க., வி.சி.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் முழங்கினர்.

தி.க மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், எம்.எல்.ஏ-க்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்டாலின் குமார், வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., அன்பில் பெரியசாமி, சேகரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜவஹர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என் நேரு, '1972-ல்  தி.மு.க-வின் பலத்தைக் குறைக்க நினைத்த அப்போதைய  மத்திய அரசு, சதி செய்துதான் எம்.ஜி.ஆரை தி.மு.க-விலிருந்து பிரித்தது. அதன்பிறகு, தலைவரையும் தி.மு.க-வையும் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு மோசமாகப் பேசி தி.மு.க-வின் பலத்தைக் குறைத்தனர். அதன் விளைவுதான் தமிழகம் இவ்வளவு மோசமான சூழலுக்கு ஆளாகியுள்ளது. காங்கிரஸ், பல நேரங்களில் உறவாக இருந்துள்ளது. சில நேரங்களில் நமக்கு எதிராகவும் இருந்துள்ளது. மற்ற கட்சிகளும் அப்படித்தான். 

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், 50 தொகுதிகளில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் வெற்றிவாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறார்கள். அவர்கள் யாருக்கு ஆதரவு தருகிறார்களோ, அந்த அரசியல் கட்சி வெற்றிபெறும் சூழ்நிலை உள்ளது. ஆனால், முஸ்லிம் அமைப்பு, பல்வேறு அமைப்புகளாகப் பிளவுபட்டுள்ளது. பி.ஜே.பி, முத்தலாக் முறையை ஒழித்து, வீட்டையே இரண்டாக்கிவிட்டார்கள். இஸ்லாமிய சிறுபான்மை அமைப்புகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு ஒரே அமைப்பாகச் செயல்பட்டால், 50 தொகுதிகளின் வெற்றியை அவர்கள் நிர்ணயிக்க முடியும். மத்திய அரசும் அவர்களுக்கு எதிராகச் செயல்படுவதைத் தடுக்க முடியும்.

கொஞ்சம் யோசியுங்கள், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகம் என்னவாகும் என்பதை யோசித்துப் பாருங்கள். தி.மு.க-வும், தளபதி ஸ்டாலினும் மக்களுக்காகப் போராடக்கூடிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். தேர்தல் வந்தால் தளபதி ஸ்டாலினை வெற்றிபெற வைத்தால், நிச்சயம் தமிழர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் ஆட்சியாக அமையும்.

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி ஆளும்கட்சி, எதிர்க்கட்சி மசோதா நிறைவேற்றி... அது, குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டது. அந்த அவசர சட்ட மசோதாவுக்கு ஆளுங்கட்சியினர் அழுத்தம்கொடுக்காத காரணத்தால், தற்போது தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் வேண்டுமென்றால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்றால், அனைத்துக் கட்சிகளும் ஒரே குறிக்கோளாகச் செயல்பட்டால்தான் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குபெற, தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் இருந்தால் மட்டுமே முடியும். குடியரசுத் தலைவரிடம் தமிழக அரசு ஒப்புதல் பெறவில்லை என்றால், ஆட்சி மாற்றம்தான் அதற்குத் தீர்வாக அமையுமேயானால், தி.மு.க அதற்கு தயங்காது. ஒருவேளை, தி.மு.க ஆட்சிக்கு வந்தாலும் நீட் தேர்வில் விலக்குபெற முடியவில்லை என்றால், நீட் தேர்வு எழுதும் மாணவர்களைக் கண்டிப்பாகக் காப்பி அடிக்கவிடுவோம். இந்தியாவின் பிற மாநிலங்களான பீகாரில் காப்பியடிக்கிறார்கள்; மத்தியப் பிரதேசத்தில் காப்பியடிக்கிறார்கள்; தேர்வு அறையைத் திறந்துவிட்டு எல்லோரும் தேர்வு எழுதுகிறார்கள். எல்லோரும் இப்படி இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் நாங்கள் எவ்வளவு நாளைக்கு உத்தமர்களாக இருக்க முடியும்?

அரசுப் பணியாளர்கள் தேர்வில், வெளிநாட்டவர்களைக் கொண்டுவந்துவிட்டார்கள். லாலு பிரசாத் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் இங்கு ரயில்வே பணிக்கு வந்தனர்.  இவ்வளவு பேர் பணிக்கு எப்படி வந்தார்கள்? அவர்களுக்குத் தேர்வுத்தாள்கள் முதலிலேயே வழங்கப்பட்டுவருகிறது. கல்விக்கூடம் நடத்தும் பலர் இங்கிருக்கிறார்கள், நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கவில்லை என்றால், நமது மாணவர்களை  வெற்றிபெறவைக்க ஏற்பாடுசெய்யுங்கள்.  நாம் உத்தமர்களாக இருக்க வேண்டாம். தமிழக மக்களுக்கு நன்மை செய்ய, நாம் அனைவரும் ஒற்றுமையுடன் நிற்க வேண்டும். தலைமை என்ன கட்டளையிடுகிறதோ, அதைச் செய்து முடிக்க வேண்டும். தலைமையின் உணர்வை  நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து,  திருச்சி மாவட்டத்தில் செய்துமுடிப்போம்' என்றார்.

மீண்டும் நீட் பற்றிய பேச்சு எழத் தொடங்கிவிட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்