ராமேஸ்வரம் கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்

ராமேஸ்வரம், ராமநாதசுவாமி திருக்கோயில் மாசி சிவராத்திரி திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சிவராத்திரி இரவன்று வெள்ளிரதமும், மறுநாள் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

ராமேஸ்வரம் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம் 

இந்துக்களின் புனிதத் தலமாக விளங்கும் ராமேஸ்வரம், அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா 10 நாள்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவிற்கான கொடியேற்றம், ராமநாதசுவாமி கோயிலில் இன்று காலை நடந்தது. சுவாமி சந்நிதியில் உள்ள தங்கக் கொடிமரத்தில், திருவிழாக்கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு ஆராதனை வழிபாடு நடந்தது.  10 நாள்கள் நடைபெற உள்ள இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, பிப்ரவரி 13-ம் தேதி இரவு, மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இரவு, சுவாமி-அம்பாள் வெள்ளிரதத்தில் ரதவீதிகளில் உலா வருவர். இதைத் தொடர்ந்து, மறுநாள் காலை 9 மணிக்கு, மீன லக்கனத்தில் சுவாமி - அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது. 15-ம் தேதி, மாசி மகா அமாவாசை தினத்தில் பகல் ஒரு மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனங்களில் அக்னி தீர்த்தத்திற்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

மாசி மகா சிவராத்திரி திருவிழா நாள்களில், நாள் தோறும் சுவாமி -அம்பாள் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளுதலும் அதைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!