தந்தையின் மரணத்தைத் தாங்கமுடியாத மகன்! ஈமச்சடங்கு செய்தபோது உயிரிழந்த சோகம் | Son died during his father's funeral

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (06/02/2018)

கடைசி தொடர்பு:16:20 (06/02/2018)

தந்தையின் மரணத்தைத் தாங்கமுடியாத மகன்! ஈமச்சடங்கு செய்தபோது உயிரிழந்த சோகம்

 

மதுரை மேலூர் பகுதி, விவசாயத்துக்கு பெயர் பெற்றதோடு விவசாயத்துக்குப் பயன்படும் கலப்பை தயாரிப்பில் ஆசிய அளவில் பெயர்பெற்றது . ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில், மேலூர் கலப்பை வேண்டும் என தேடி வாங்கிச் செல்வது இன்றளவிலும் உண்டு. இப்பகுதியில் குவாரிகள் வந்ததற்குப் பின், விவசாயம் சற்று பின் தங்கியது. ஆனாலும் நெல், வாழை, கரும்பு  உள்ளிட்ட பயிர்களைத் தொடர்ந்து விவசாயம் செய்துவருகின்றனர். அந்த அளவுக்கு விவசாயத்தைப் பெரியதாக நம்பி வாழ்ந்துவருபவர்கள்.

இந்நிலையில், கடந்த ஆண்டு விவசாயிகள் தற்கொலை மற்றும் மரணம் அதிக அளவு அரங்கேறியது. ஆனால், அரசுக் கணக்கில் மிக சொற்ப அளவு மட்டுமே புள்ளிவிவரம் காட்டப்பட்டது. இதனிடையே, மேலூர் அருகேயுள்ள அட்டப்பட்டியைச் சேர்ந்த விவசாயி நம்பியார், தனக்குச் சொந்தமான அரை ஏக்கர் பரப்பளவில் சுமார் 60 சென்ட் அளவில் நெற்பயிர்களைப் பயிரிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் போதிய தண்ணீர் இல்லாததால், பயிர்கள் அனைத்தும் கருகியது. விரக்தியடைந்த நம்பியார், கருகிய பயிர்களை கால்நடைகளுக்குத் தீவனமாக அளித்தார். அதிகம் செலவுசெய்து, பெற்ற பிள்ளைபோல தனது வயலில் வளர்த்த நெற்பயிர்கள் கருகியதை எண்ணி அங்கேயே மயங்கிவிழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நம்பியார் மரணத்தை  வீட்டில் உள்ளவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கடனுக்கு மேல் கடன் என்ற நிலையில், இவரது உயிரிழப்பு அவரது மகன் நல்லசாமியையும் வாட்டியது. இதைத் தொடர்ந்து, இறந்த நம்பியாரின் ஈமச்சடங்குகளை செய்வதற்காக திருப்புவனத்தில் உள்ள வைகை ஆற்றங்கரைக்குச் சென்றுள்ளார். ஈமச்சடங்கு செய்யும்போது, தந்தை இறந்த துக்கம் தாங்காமல்  நல்லசாமி மாரடைப்பால் உயிரிழந்தார். அடுத்தடுத்து தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த நல்லசாமிக்கு பூமாலை என்ற மனைவியும், யுவராஜ் என்ற மகனும், ஆதிரை என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு அரசு உடனடியாக உதவி செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, 'இதுபோன்ற நிலை நீடிக்காமல், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் விவசாய நிலங்களை ஆய்வுசெய்து, கருகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.