`இப்படியும் புகார் கொடுக்கலாம்' - போலீஸ் நிலையத்துக்குச் சென்ற விநோத புகார்  | peculiar complaint filed in chennai police station

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (06/02/2018)

கடைசி தொடர்பு:16:35 (06/02/2018)

`இப்படியும் புகார் கொடுக்கலாம்' - போலீஸ் நிலையத்துக்குச் சென்ற விநோத புகார் 

சாலை

சென்னையில் சாலை சரியில்லாததால் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் விழிப்பு உணர்ச்சி அமைப்பின் தலைவர் யுவராஜ், சென்னை கோயம்பேடு, மதுரவாயல் ஆகிய இரண்டு போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளார். அதில், சாலை சரியில்லாததால் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

 இதுகுறித்து யுவராஜ் கூறுகையில், "சென்னை கோயம்பேடு - வானகரம் பூந்தமல்லி நெடுஞ்சாலை தமிழகத்தையும் கர்நாடகாவையும் இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. இந்தச் சாலையைத் தினமும் ஏராளமானவர்கள் பயன்படுத்துகின்றனர். கடந்த 2004-ம் ஆண்டு இந்தச்சாலை போடப்பட்டது. அதன் பிறகு சாலை சீரமைக்கப்படவில்லை. இதன்காரணமாகக் குண்டும் குழியுமாகச் சாலை காட்சியளிப்பதோடு போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதையடுத்து, எங்கள் அமைப்பு சார்பில் 2006, 2009, 2015 ஆகிய ஆண்டுகளில் சாலையைச் சீரமைக்க அரசிடம் கோரிக்கைவைத்தோம்.

புகார் கொடுத்தவர்கள்

எங்களது கோரிக்கையை ஏற்று 'பேட்ஜ் ஓர்க்' மட்டும் செய்யப்பட்டது. ஆனால், சாலை முழுமையாகச் சீரமைக்கப்படவில்லை. இதற்கிடையில், மதுரவாயல் & துறைமுகம் மேம்பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணியால் இந்தச் சாலை மிகவும் பழுதானது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, சாலையைப் புதுப்பிக்க கடந்த 20.12.2017-ல் நெடுஞ்சாலைய்ஹ் துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு புகார் மனு அனுப்பினோம். அதில் 10 தினங்களுக்குள் புதுப்பிக்காத பட்சத்தில் தனது கடமையைச் செய்யத் தவறிய தாங்களும் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீதும் குற்றப்பிரிவு 187, 188-ன்படி கைது செய்யும் பொருட்டு கோயம்பேடு, மதுரவாயல் போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தோம். ஆனால் 10 நாள் கால அவகாசம் முடிந்தும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது இரண்டு போலீஸ் நிலையங்களிலும் புகார் கொடுத்துள்ளோம். மதுரவாயல் போலீஸ் நிலையத்திலிருந்து புகார் ஏற்பு சான்றிதழ் (சி.எஸ்.ஆர்) பெற்றுள்ளோம்" என்றார்.