கங்கைகொண்ட சோழபுரத்தில் அழியும் நிலையில் நாயக்கர் கால ஓவியங்கள்! #VikatanExclusive

 கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள நாயக்கர் கால ஓவியங்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் அழியும் நிலையில் உள்ளன.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே அழகுற அமைந்திருக்கிறது கங்கைகொண்ட சோழபுரம் கோயில். ராஜராஜன் கட்டிய  தஞ்சை பெரிய கோயிலைப்போலவே, கங்கைகொண்ட சோழபுரத்தில் பெருவுடையார் கோயிலைக் கட்டி, கி.பி 1036-ம் ஆண்டு கங்கை நீரால் குடமுழுக்கு செய்வித்தான் ராஜேந்திர சோழன். காலம் கடந்து நிற்கும் இக்கோயிலுக்கு அதன் பின்னர், பல்வேறு மன்னர்கள் திருப்பணி செய்திருக்கிறார்கள்.

ராஜேந்திர சோழனின் 32 ஆண்டுக்கால ஆட்சியில், சோழீச்சரம் கோயில் 12 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டது. ஒன்பது நிலைகளைக் கொண்ட கோபுரத்தின் உயரம் மட்டும் 160 அடி. ஒரே கல்லாலான மிகப்பெரிய சிவலிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இதன் உயரம் 13.5 அடி, சுற்றளவு 60 அடி. பரப்பளவில் கோயிலின் நீளம் 567 அடி, அகலம் 318 அடி.

இத்தனை சிறப்புமிக்க இத்திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து ஒரு வருடம்தான் நிறைவடைந்திருக்கிறது. இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயிலில், ஏராளமான ஓவியங்கள் உள்ளன. கோயில் மதில்சுவர் மற்றும் உட்பிராகார சந்நிதிகளில் சில நாயக்கர் கால ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்கள் அனைத்தும் அழியும் நிலையில் உள்ளன. சில ஓவியங்கள் பராமரிக்கப்படாததால் ஓவியங்கள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றன.

ஓவியங்களை முறையாகப் பராமரிக்காமல், அலட்சியமாகச் செயல்பட்டு வருவதாக இந்திய தொல்பொருள் துறையினர் மீது பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாகத் தகவல் தெரிந்துகொள்ள, இந்திய தொல்பொருள் துறையின் தஞ்சை மண்டலப் பாதுகாப்பு உதவியாளர் சந்திரசேகரனைத் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. பாதுகாப்பு சின்னங்கள்மீது தொல்பொருள்துறை அதீத கவனம் செலுத்த வேண்டும் என்பதே பக்தர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!