வெளியிடப்பட்ட நேரம்: 16:23 (06/02/2018)

கடைசி தொடர்பு:16:33 (06/02/2018)

துணைவேந்தர் கணபதி மனைவியைத் துரத்தும் சர்ச்சை!

லஞ்சப் புகாரில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டிருப்பது  நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இடைத்தரகராக இருந்த வேதியியல் துறை தர்மராஜ் மற்றும் மதிவாணன் ஆகியோர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதில், தர்மராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், லீவ் லெட்டர் கொடுத்துவிட்டு, மதிவாணன் தனது சொந்த ஊருக்கு எஸ்கேப் ஆகிவிட்டார்.

பாரதியார் பல்கலைக்கழகம்

இந்நிலையில், இந்த லஞ்சப் புகார் மட்டுமல்லாமல், கடந்த 2016-ம் ஆண்டு, பேராசிரியர் பணி நியமனத்தில் நடந்த ஊழல் குறித்தும், லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் உள்ள குற்றங்கள் நிரூபிக்கப்படும்பட்சத்தில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சில மூத்த பேராசிரியர்கள் மற்றம் அதிகாரிகளும் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல, துணைவேந்தர் மனைவியிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே, 2,000 ரூபாய் நோட்டுகளைக் கிழித்து, தடயத்தை அழிக்க முயன்ற புகாரில், துணைவேந்தர் கணபதியின் மனைவி சொர்ணலதாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சொர்ணலதா குறித்த பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சொர்ணலதா எம்.ஏ க்ரிமினாலஜி படித்துள்ளார். அதனால்தான், ரெய்டின்போது ரசாயனம் தடவி கொடுக்கப்பட்ட, அந்தப் பணத்தைக் கிழிக்க முயன்றுள்ளார். துணைவேந்தரின் மனைவி என்பதைத் தவிர,  அவருக்கும் பல்கலைக்கழகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், பல்கலைக்கழகத்தில், அவரின் தலையீடு அதிகம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பாரதியார் பல்கலைக்கழகம்

யாருக்கு வேலை கொடுப்பது, நீக்குவது என்பதை அவர் முடிவெடுக்கும் அளவுக்கு இருந்தாராம். அதேபோல, தனது வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களையும் கொடுமைப்படுத்துவார் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, பல்கலைக்கழகத்தில் உள்ள மூத்த பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகளை, போனில் அழைத்துப் பேசும் அளவுக்கு அவர் வலம் வந்துள்ளார். அதேபோல, பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டிருக்கிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, டிஜிட்டல் பரிவர்த்தனையில் சிறந்து விளங்கிய கல்லூரிகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது.

அதன்படி, கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, துணைவேந்தர் கணபதியுடன் அவரின் மனைவி சொர்ணலதாவும் டெல்லி சென்றுள்ளார். மேலும், அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம், கணபதி விருது வாங்கும்போது, அவரின் அருகிலேயே இவரும் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். ஆனால், சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர் மேடையே ஏறவில்லை.

பாரதியார் பல்கலைக்கழகம்

இதுகுறித்து பல்கலைக்கழக ஊழியர்கள் கூறுகையில், நிகழ்ச்சியில் கலந்துகொள்வதுகூட பரவாயில்லை. ஆனால், பல்கலைக்கழகத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல், மேடையேறி விருது வாங்குவது எல்லாம் அநியாயம் என்றனர்.