சீருடை அணியாமல் வந்த நபரைக் குறிவைத்த அமைச்சரின் `கொம்பன்'! - ஜல்லிக்கட்டுப் பரபரப்பு | Minister's jallikattu bull performed well

வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (06/02/2018)

கடைசி தொடர்பு:17:34 (06/02/2018)

சீருடை அணியாமல் வந்த நபரைக் குறிவைத்த அமைச்சரின் `கொம்பன்'! - ஜல்லிக்கட்டுப் பரபரப்பு

மாடு பிடி வீரர்களுக்கான சீருடையை அணியாமல் அமைச்சர் விஜயபாஸ்கரின் வளர்ப்புக் காளையான கொம்பனை அடக்க முற்பட்ட நபரால் ஜல்லிக்கட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகிலுள்ள ஆலத்தூர் என்ற கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடந்துவருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டில் 600 காளைகளைப் பிடிக்க 250 மாடுபிடி வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும் அதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான் தொடங்கி வைப்பார். அத்துடன் தன் வளர்ப்புக் காளைகளான கொம்பனையும் செவலையையும் ஜல்லிக்கட்டுக்கு அனுப்பியும் வைப்பார். அந்த முறைமையின்படியே  இன்று ஜல்லிக்கட்டை விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அவரின் வளர்ப்புக் காளைகளும் வழக்கம்போல களம்காண வந்திருந்தன.  காளைகள் வரிசையாக அவிழ்த்துவிடப்பட்டுக்கொண்டிருந்தன. மஞ்சள் நிறத்தில் சீருடை அணிந்திருந்த மாடுபிடி வீரர்கள் உற்சாகமாகக் காளைகளை அடக்கிக்கொண்டும் போக்குக்காட்டிய சில காளைகளை அடக்கமுடியாமலும் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அப்போதுதான், அந்த அறிவிப்பு ஒலிபெருக்கியில் வந்து மாடுபிடி வீரர்களை மட்டுமல்லாமல் பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்தியது. 'இப்போது, நமது மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் வளர்ப்புக்காளைகளான செவலையும் கொம்பனும் களம் காணப்போகின்றன. அவற்றை அடக்குபவர்களுக்கு அமைச்சரின் சார்பாகப் பரிசு வழங்கப்படும்" என்றார் அறிவிப்பாளர். எப்போதுமே செவலைதான் முதலில் அவிழ்த்துவிடப்படும். பிறகுதான் கொம்பனைக் களத்தில் இறக்குவார்கள். இதில், செவலைப் பெரும்பாலான ஜல்லிக்கட்டுகளில் பிடிமாடாகவே இருந்துவிடும். 'கொம்பன்'தான் மாடுபிடி வீரர்களிடம், 'எலே, மக்கா... என்னைய அடக்கவாங்கடா பார்ப்போம்' என்ற ரீதியில் சவால்விட்டு சீறீப்பாயும். செவலை அவிழ்த்து விடும்போது மாடுபிடி வீரர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். அதைப்பிடிக்க 'நான்... நீ' என்று போட்டிப்போட்டு முன்னேறி வருவார்கள். ஆனால், கொம்பன் அவிழ்த்துவிடப்படும்போது கதையே வேறு. வீரர்கள் தெறித்து ஓடுவார்கள். தைரியம் கொண்ட வீரர்கள் ஐந்தடி தூரம் இடைவெளிவிட்டு பாதுகாப்பாக நின்று கொம்பனை எதிர்கொள்வார்கள். இப்படித்தான் செவலையும் கொம்பனும் கலந்துகொள்ளும் ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் நடப்பது வழக்கம்.

ஆலத்தூரிலும் அப்படியே நடந்தது. முதலில் செவலையை அடக்கிவிட்டு வீரர்கள் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அடுத்து கொம்பனை அவிழ்த்து விடப்போவதாக அறிவிப்பு வந்தது. அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. மாடுபிடி வீரர்களுக்கான சீருடை அணியாத ஒருவர் திடீரென எங்கிருந்தோ வந்தார். மாடுபிடி வீரர்களுடன் நின்றார். கொம்பன் அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த கொம்பன் அந்த நபரையே குறிவைத்துத் துரத்தியது. அந்தச் சீருடை அணியாத நபரும் அங்குமிங்கும் ஓடினார். முடிவில் அவரை கீழே தள்ளிவிட்டு, மற்ற மாடுபிடி வீரர்களையும் மிரட்டலாகப் பார்த்துவிட்டு, வழக்கம்போல், பிடிபடாத மாடாக ஓடியது. சீருடை அணியாத அந்த நபரால் மாடுபிடி வீரர்கள் மத்தியில் பரபரப்பு எழுந்தது. கடைசியில், "தான் மாடுபிடி வீரர் இல்லை. மாடு உரிமையாளர்" என்று அவர் கூறிய பிறகுதான் எழுந்த பரபரப்பு அடங்கியது.