வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (06/02/2018)

கடைசி தொடர்பு:19:40 (06/02/2018)

சாலைகளில் சுற்றித் திரியும் யானைக்கூட்டம்! அச்சத்தில் மக்கள்

நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதியில் யானைக் கூட்டம் விளை நிலங்களுக்குள் புகுந்து நாசப்பட்டுத்தி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். யானைகளைக் கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

யானை கூட்டம்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. புலி, சிறுத்தை, யானைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகளும் அரிய வகை மூலிகைகளையும் கொண்டதாக இந்த அடர்ந்த வனப் பகுதி உள்ளது. இங்குள்ள விலங்குகள் அடிக்கடி விளை நிலங்களிலும் புகுந்து விவசாயிகளுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, நெல்லை மாவட்டம் பாபநாசம், பொதிகையடி, டாணா, அனவன்குடியிருப்பு, திருப்பதியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைகள் அடிக்கடி நுழைந்து ஆடுகளையும் நாய்களையும் தூக்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. 

தண்ணீருக்குக்காகவே வன விலங்குகள் மக்கள் வாழும் இடங்களுக்கு உள்ளேயும் விளை நிலங்களிலும் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தின. கடந்தாண்டு பெய்த வடகிழக்குப் பருவ மழை போதுமான அளவில் இருந்ததால் விலங்குகளின் தொல்லை இல்லாத நிலைமை நிலவியது. இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் சேர்வலாறு அணைப் பகுதியில் கடந்த இரு தினங்களாக யானைகள் கூட்டமாகச் சுற்றித் திரிகின்றன. சேர்வலாறு பகுதியில் காணிக் குடியிருப்பு உள்ளது. அத்துடன், நீர்மின்சக்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டு வரக்கூடிய மின்வாரியத் துறையினரின் குடியிருப்பும் அந்தப் பகுதியிலேயே உள்ளன. அங்கு யானைக்கூட்டம் சாலைகளில் சுற்றித் திரிவது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

அத்தியாவசியத் தேவைக்காக சாலைகள் மூலமாகப் பொதுமக்கள் செல்லும்போது அவை சாலைகளின் குறுக்கே வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் அங்கிருந்து ஓடித் தப்பும் நிலைமை இருக்கிறது. அத்துடன், அனவன்குடியிருப்புப் பகுதியில் நெல் வயலில் புகுந்த யானைகள் அவற்றை முழுமையாகச் சேதப்படுத்தின. அத்துடன் வாழைத் தோட்டங்கள் உள்ளிட்டவற்றையும் யானைகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதைப்பற்றி அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த சில தினங்களாக இந்தப் பகுதியில் யானைகள் கூட்டமாக வருகின்றன. யானைகளின் நடமாட்டம் காரணமாக விவசாயிகளால் விளை நிலங்களுக்குச் சென்று பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. பொதுமக்களும் வெளியிடங்களுக்குச் செல்ல முடியாத நிலைமை இருக்கிறது. அதனால் வனத்துறையினர் உடனடியாக இதில் தலையிட்டு யானைகளைக் காட்டுக்குள் விரட்ட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.