முதல் முறையாகப் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் நிர்வாகிகள்மீது ஊழல் புகார்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் டாப் டு பாட்டம் வரை லஞ்சம், ஊழல், முறைகேடு தொடர்ந்து அம்பலப்பட்டு வரும் நிலையில் இன்று பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் மணிவண்ணன் முதன்முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்கலைக்கழக முன்னாள் நிர்வாகிகள்மீது ஊழல் புகார் கொடுத்திருப்பது பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி, பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரித்தபோது, ''பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைத்தூரக் கல்வி துறையின் மூலம் படிப்பகங்கள் அமைத்தது, வினாத் தாள்கள் அச்சடித்து வாங்கியது, விடைத்தாள்கள் திருத்தியது, தேர்வு முடிவுகள் வெளியிட்டது வரை பல முறைகேடுகள் நடந்துள்ளன. தமிழ்த்துறைத் தலைவர் மாதையன் கன்ட்ரோலராகப் பொறுப்பில் இருந்தபோதும், பிரின்ஸ் தன்ராஜ் கன்ட்ரோலராக இருந்த காலகட்டத்திலும் தொலைதூரக் கல்வி இயக்குநராகக் குணசேகரன் இருந்தபோது இந்த ஊழல்கள் நடந்துள்ளன.

இதன்மூலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு 8 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சேலம் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் மணிவண்ணன் புகார் கொடுத்திருக்கிறார். அதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மணிவண்ணனின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதமும் கன்ட்ரோலர் லீலாவின் பதவிக்காலம் இந்த மாத இறுதியிலும் நிறைவடையும் நிலையிலும் இவர்கள் மீதே பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும்போது முன்னாள் பல்கலைக்கழகத்தில் இருந்த நிர்வாகிகள்மீது ஊழல் புகார் தெரிவித்து இருப்பது பலரையும் சந்தேகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!