சர்வதேச தடகளப் போட்டியில் சாதித்த மதுரை மாற்றுத்திறனாளி வீரர்கள்!

சமீபத்தில் மதுரையில் பயிற்சி பெற்ற வீரர்கள் மாற்றுத்திறானிகள் பிரிவில் ஆசிய அளவு போட்டிகளிலும், குள்ளர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகளில் கலந்துகொண்டு தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தனர். மதுரையைச் சேர்ந்த கணேசன் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு மதுரை மக்கள் வாழ்த்து தெரிவித்தனர். மாற்றுத்திறனாளிகள் தடகளப் பயிற்சியாளர் ஜெ.ரஞ்சித்குமாரை மதுரை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

இந்நிலையில் இலங்கையில் ஜனவரி 26 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை நடைபெற்ற மாற்றுத்திறனாளிக்கான சர்வதேச தடகளப் போட்டியில் இந்தியா சார்பாக 65 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இப்போட்டிகள் மாற்றுத்திறன் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. இதில், ஓட்டப் போட்டிகளான 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் அடக்கம்.

மதுரையைச் சேர்ந்த செய்யது அபுதாகீர் (எப்.56) பிரிவில் குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கமும், ரூபா வாசுதேவன் என்பவர் (எப்.46) பிரிவில் குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகியவற்றில் இரண்டு தங்கப்பதக்கங்களும், மனோஜ் எப்.41 பிரிவில் வட்டு, ஈட்டி எறிதலில் இரண்டு தங்கப்பதக்கமும், கணேசன் எப்.41 பிரிவில் வட்டு எறிதலில் தங்கப்பதக்கமும், ஈட்டி எறிதலில் வெங்கலப் பதக்கமும் வென்றனர். இவர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகுமார் மற்றும் மாற்றுத்திறாளிகள் பயிற்சியாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்தி பரிசு வழங்கினர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!