தமிழக பொறியியல் கல்லூரிகளில் முதல் செமஸ்டரில் அதிர்ச்சி தேர்ச்சி சதவிகிதம்..! என்ன காரணம்?!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்புக் கல்லூரிகளாக உள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் முதல் செமஸ்டர் தேர்வு முடிவு, நேற்று வெளியானது. தேர்வு எழுதிய 1,13,298 மாணவர்களில் 36,179 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிபெற்றுள்ளனர்.

கல்லூரி தேர்வு

அண்ணா பல்கலைக்கழகத்தின் முக்கியக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி தொழில்நுட்பக் கல்லூரிகளின் முதல் செமஸ்டர் தேர்வில் 65 சதவிகிதம் மாணவர்கள், அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெற்றனர். இந்நிலையில், 500-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளின் முடிவு, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதில் 32 சதவிகிதத்தினர் மட்டுமே தேர்ச்சிபெற்றிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு, பொறியியல் படிப்புக்கான பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டதோடு, மாணவர்கள் விரும்பும் பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலாம் ஆண்டில் கணினிப் பாடமான `சி மொழி'-க்குப் பதிலாக `Python Programming' பாடம் சேர்க்கப்பட்டது. இந்தப் பாடத்தில், 62 சதவிகிதம் மாணவர் தேர்ச்சிபெற்றனர். ஆனால், கணிதப் பாடத்தில் 44 சதவிகிதத்தினரும், இயற்பியல் பாடத்தில் 53 சதவிகிதத்தினரும், வேதியியல் பாடத்தில் 59 சதவிகிதத்தினரும் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர்.

பெரும்பாலான கல்லூரிகளில் 50 சதவிகிதம் பேருக்குமேல் தேர்ச்சிபெறவில்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தேர்ச்சிவிகிதம் 15 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை குறைந்திருப்பது தெரிகிறது. 

அண்ணா பல்கலைக்கழகம்

கணிதப் பாடத்தில் தேர்ச்சி குறைந்தது குறித்து, கணிதத் துறைப் பேராசிரியரிடம் பேசியபோது, ``பள்ளி மாணவர்கள், +1 கணிதப் பாடத்தைப் படிக்காமல் +2 கணிதப் பாடத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்திப் படிக்கின்றனர். இதனால், அடிப்படை விஷயங்கள் தெரியாமல் கல்லூரிப் படிப்பில் தடுமாறுகின்றனர். பதினொன்றாம் வகுப்பில் படிக்காதது, கல்லூரி முதல் செமஸ்டர் தேர்வு வரை எதிரொலிக்கிறது. 

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போதும், இந்த ஆண்டு தேர்ச்சிபெறாதவர்களின் எண்ணிக்கை 10 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இதற்கு, பொறியியல் படிப்புக்கான வகுப்புகள் காலதாமதமாக ஆரம்பிக்கப்பட்டதே முதன்மைக் காரணம். ஒவ்வோர் ஆண்டும் மருத்துவக் கலந்தாய்வு நடந்த பிறகே பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடக்கும். கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கான வழக்குகளால் மருத்துவச் சேர்க்கை தாமதமானது. இதனால், பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போனது. எப்போதும் ஜூலை மாதம் மூன்றாவது வாரத்திலேயே வகுப்புகள் தொடங்கிவிடும். ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில்தான் வகுப்புகள் ஆரம்பித்தன. மூன்றரை மாதங்களுக்குள் அனைத்துப் பாடங்களையும் நடத்தி முடிக்க முடியவில்லை. இதுவும் மாணவர்கள் தேர்ச்சிபெறாததற்கு முக்கியக் காரணம்" என்றார். 

கிண்டி பொறியியல் கல்லூரி டீன்இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக டீன் கீதாவிடம் பேசியபோது, ``மாணவர்கள், பள்ளிப் பொதுத்தேர்வில் கேட்கப்படுவதுபோல் கல்லூரித் தேர்விலும் கேட்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். பயன்பாட்டுக்குத் தகுந்தாற்போல் கேள்விகள் கேட்கும்போது, பதிலளிக்கத் தெரியாமல் தடுமாறுகின்றனர். முதலாம் ஆண்டு மாணவர்களிடம், ப்ளஸ் டூ வகுப்பில் கேட்கப்படும் கேள்விகள்போல் கல்லூரித் தேர்வில் கேட்க மாட்டார்கள் என்பதைப் புரியவைக்கவேண்டியுள்ளது. இந்த ஆண்டு, கிண்டி பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்குத் தேர்வுக்கு முன்னரே உரிய ஆலோசனையும் வழிகாட்டுதலையும் வழங்கினோம். இதனால் முதலாம் ஆண்டு மாணவர்கள், கணிதப் பாடத்தில் 78 சதவிகிதம் பேர் தேர்ச்சிபெற்றனர். பொறியியல் படிக்கும் மாணவர்கள் தனியே அமர்ந்து படிக்காமல், கூட்டாக அமர்ந்து படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால், தேர்ச்சி சதவிகிதம் உயரும்" என்றார். 

அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகள்முதலாம் செமஸ்டரில் தேர்ச்சிபெறாதவர்கள், உடனே இரண்டாவது செமஸ்டர் பிரிவில் அரியர் தேர்வை எழுத முடியாது. மூன்றாவது செமஸ்டர் முடிவில்தான் முதல் செமஸ்டர் அரியர் தேர்வை எழுத முடியும். ரீவேல்யூவேஷன் செய்ய நினைக்கும் மாணவர்கள், ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து ரீவேல்யூவேஷன் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி உமாவிடம் பேசியபோது, ``கடந்த ஆண்டு ரீவேல்யூவேஷனில் அதிக மதிப்பெண் வழங்கிய 1,074 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால், இந்த ஆண்டு ரீவேல்யூவேஷன் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது. இனி அரியர் வைத்தால், குறிப்பிட்ட ஆண்டுக்குள் தேர்ச்சிபெற்றிருக்கவேண்டியது அவசியம்" என்றார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!