வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (06/02/2018)

கடைசி தொடர்பு:18:35 (06/02/2018)

கருணைக் கொலை கேட்ட தம்பதியின் குழந்தைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை!

கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த ஐந்தரை வயது குழந்தை, தற்போது மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானத்தின் முயற்சியால் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்தவர் டென்னிஸ்குமார். அவருக்கு வயது 38.  அவரின் மனைவி மேரிசுஜா. அவருக்கு வயது 32. அந்தத் தம்பதிகளுக்கு கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் தனியார் மருத்துவமனையில் வைத்து அறுவைசிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாள்களிலேயே மூச்சுப் பேச்சின்றி இருந்தது. அதையடுத்து, கேரளாவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர்.

அந்த மருத்துவமனையில், குழந்தைக்கு மூளையில் பாதிப்பு இருப்பதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து குழந்தைக்கு ஒன்றைரை வயது ஆனநிலையில், குழந்தையின் பார்வை பறிபோனது. இதையடுத்து, குழந்தைக்கு உரிய சிகிச்சை வேண்டும் அல்லது கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று டென்னிஸ்குமார் தம்பதியினர் மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர், குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு கருணை மனு அளித்தனர். பிரசவத்தின்போது சிகிச்சையளித்த மருத்துவமனையின் மீது டென்னிஸ் குமார் புகார் அளித்திருந்தார். அதனால், மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் தலைமையிலான 6 பேர் கொண்ட மருத்துவக்குழு குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் விசாரணை நடத்தியிருந்தனர்.

இதற்கிடையே குழந்தையின் மேல்சிகிச்சைக்கு சம்பந்தப்பட்ட டாக்டர்கள் ரூ.75 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கேட்டு டென்னிஸ்குமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தபோதிலும், குழந்தையின் உடல்நலத்தில் எத்தகைய முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்து வந்தது. தற்போது, குழந்தைக்கு ஐந்தரை வயதாகிறது. இதுதொடர்பான செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், குழந்தைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்துள்ளார். பின்னர், அந்தக் குழந்தை நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அல்போன்ஸ் கண்ணந்தானம் தெரிவித்துள்ளார்.