கொலை முயற்சி வழக்கில் புதுச்சேரிப் பெண் தாதா எழிலரசி விடுதலை!

கொலை முயற்சி வழக்கில் புதுச்சேரிப் பெண் தாதா எழிலரசியை விடுதலை செய்து காரைக்கால் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.  

காரைக்கால் மாவட்டம், திருபட்டினத்தைச் சேர்ந்த பிரபல கள்ளச்சாராய வியாபாரியும், கோடீஸ்வருமான ராமு என்கிற ராதாகிருஷ்ணனையும், அவரது இரண்டாவது மனைவியான எழிலரசியையும் 11.01.2013 ல் கூலிப்படையினர் காரைக்காலில் நடுரோட்டில் வைத்து வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ராமு பலியானார். 137 இடங்களில் உடலில் வெட்டுப்பட்ட எழிலரசி உயிர்ப் பிழைத்தார். தன் காதல் கணவர் ராமுவின் கொலைக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடித்தார். அதன்படி ராமுவைக் கொலைச் செய்தவர்களில் முக்கியமானவரான ஐயப்பன் 08.07.2013 ம் ஆண்டிலும், ராமுவின் முதல் மனைவி வினோதா சீர்காழி மெயின்ரோட்டில் 12.04.2015 ம் ஆண்டிலும் கொலை செய்யப்பட்டனர். இந்த வரிசையில் புதுவை முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி. சிவக்குமார் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இருக்கும்போதே 03.01.2017ல் படுகொலை செய்யப்பட்டார்.  

மேற்கண்ட மூன்று கொலை வழக்குகளிலும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள எழிலரசி ஜாமீனில் வெளிவந்துள்ளார். கடந்த வாரம் புதுச்சேரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மேலும் சிலரைக் கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்தான், இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காரைக்கால் கோர்ட்டுக்குக் கொண்டுவரப்பட்டார் எழிலரசி. அவர்மீது 2011 ம் ஆண்டு ராமுவின் முதல் மனைவி வினோதாவைக் கொலைச் செய்ய முயற்சி செய்ததாக ஒரு வழக்கு விசாரணையில் இருந்தது. அந்த வழக்கில் எழிலரசியை விடுதலைச் செய்து காரைக்கால் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 2011ல் வினோதாவை கொலைச் செய்ய முயன்ற வழக்கில் தற்போது எழிலரசி விடுதலை செய்யப்பட்டாலும், 2015 ல் வினோதாவைக் கொலைச் செய்த வழக்கில் எழிலரசி முக்கியக் குற்றவாளியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!