வெளியிடப்பட்ட நேரம்: 10:07 (07/02/2018)

கடைசி தொடர்பு:10:41 (07/02/2018)

ஒரே ஊரில் இரண்டு கூட்டம்! உச்சத்தில் தி.மு.க கோஷ்டி பூசல்

தி.மு.க-வுக்குள் நடந்துவரும் கோஷ்டி பூசல்களை முடிவுக்குக் கொண்டுவர அதன் செயல்தலைவர் ஸ்டாலின் அறிவாலயத்தில் தொண்டர்களைக் கூட்டி ஆலோசனை செய்து வருகிறார். ஆனால், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளரோ ஒரே ஊருக்குள் நடந்த கட்சியின் இரு கோஷ்டி கூட்டங்களிலும் பங்கேற்று கோஷ்டி அரசியலை வளர்த்திருக்கிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் தி.மு.க கோஷ்டி பூசல் கூட்டங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன். தற்போது இவரின் மகன் சுப.த.திவாகரன் மாவட்டச் செயலாளராக இருந்துவருகிறார். தங்கவேலன் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு ஏற்றதிலிருந்து இன்று வரை கட்சிக்குள் வேறு நபர்களை முன்னிலைக்கு வர விடுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக நிலவி வருகிறது. இதனால் மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பின்னடைவுக்குப் போனதுடன் தங்கவேலனுக்கு எதிரான அணிகளும் கட்சிக்குள் உருவாகி இயங்கிவருகின்றன. தங்கவேலனின் மகன் திவாகரன் மாவட்டச் செயலாளரான பின்பும் இந்நிலை தொடர்கிறது.

இந்நிலையில், ராமேஸ்வரம் தி.மு.க-வினரும் இரு அணிகளாகப் பிரிந்து கிடக்கின்றனர். ராமேஸ்வரம் நகர் செயலாளராக இருந்து வந்த ஜான்பாய், அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்தார். இதனால் ஜான்பாயின் சிஷ்யனாக வலம் வந்த நாசர்கான் என்பவர் தலைமையில் நகர் தி.மு.க-வுக்கு பொறுப்புக் குழு போடப்பட்டது. இந்தக் குழு இயங்கி வந்த நிலையில் சமீப காலமாக  திடீரென ஜான்பாய் மீண்டும் கட்சி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். கட்சி அறிவிக்கும் போராட்டங்கள் எல்லாம் இரு அணிகளாலும் தனித் தனியாக நடத்தப்பட்டது. இதனால் இங்கு தி.மு.க இரு அணிகளாக இயங்கும் நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே ஈரோட்டில் நடைபெறும் சிறப்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்க ராமேஸ்வரத்தில் தி.மு.க-வின் இரு அணிகளும் தனித் தனியாக ஊழியர் கூட்டத்தை நடத்தினர். கட்சியினரை ஒற்றுமைபடுத்தி ஒரே அணியாக மாற்ற முயல வேண்டிய மாவட்டச் செயலாளரான திவாகரன், அவ்வாறு செய்யாமல் இரு அணியினரும் கூட்டிய தனித் தனி கூட்டங்களிலும் பங்கேற்று கோஷ்டி அரசியலை வளர்க்கத் துணையாக இருந்துள்ளார். இதனால் உண்மையான தி.மு.க தொண்டர்கள் மனம் வெதும்பிய நிலையில் யார் பின்னால் செல்வது எனத் தெரியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.