பல்கலைக்கழக மோசடிகள் பற்றி பொது விசாரணை: சிவில் உரிமை அமைப்பு கோரிக்கை | civil organisation demand to conduct public hearing regarding Univ. scandal

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (06/02/2018)

கடைசி தொடர்பு:22:00 (06/02/2018)

பல்கலைக்கழக மோசடிகள் பற்றி பொது விசாரணை: சிவில் உரிமை அமைப்பு கோரிக்கை

பல்கலை.

உயர்நிலை விசாரணைக் கமிஷன் அமைத்து, தமிழகப் பல்கலைக்கழகங்கள் அளவில் மட்டுமன்றி, அரசு உதவி பெறும் அனைத்து கல்லூரிகளிலும் நடைபெற்றுள்ள உதவிப் பேராசிரியர் பணி நியமனங்களை அரசு விசாரிக்க வேண்டும் என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ்நாடு புதுவை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் கண.குறிஞ்சி, செயலர் இரா.முரளி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்டிருக்கும் இவ்வேளையில், தமிழகம் முழுவதும் பரவலாக எல்லா அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் பல லட்சங்கள் உதவிப்பேராசிரியர் பணி நியமனங்களுக்குப் பெறப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த லஞ்சப் பேரலையில் கல்லூரி நிர்வாகத்தினர், கல்லூரி கல்வி இயக்குநர், கல்லூரி இணை இயக்குநர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் எனப் பலர் பங்கு பெற்றிருப்பதாகக் கருதுகிறோம். பல கல்வி நிறுவனங்களில் சரியான முறையில் நேர்முகத்தேர்வுகள் நடைபெறவில்லை என்ற புகார்களும் உள்ளன. சில கல்லூரிகளில் பணிக்குச்சேர்ந்த ஆசிரியர்கள் லஞ்சப்பணத்தை இன்னும் தவணை முறையில் செலுத்தி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் நடைபெற்று வரும் இந்த ஊழலை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை பி.யு.சி.எல். வன்மையாகக் கண்டிக்கிறது. இதுவரை 3000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள், நபருக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய்க்கு மேலும் வசூலிக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

தமிழகப் பல்கலைக் கழகங்களில் பணம் கொடுக்காமல் யாரும் துணைவேந்தர் ஆகவே முடியாது என்ற குற்றச்சாட்டும் பலமாக இருக்கிறது. இவ்வாறு நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க வேண்டியது அரசின் கடமை. இதற்காக அரசு உயர்நிலை விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்து, அரசு உதவி பெறும் அனைத்துக் கல்லூரிகளிலும் செய்யப்பட்டுள்ள உதவிப்பேராசிரியர் பணி நியமனங்களையும் விசாரிக்க வேண்டும். இது மூன்று மாதக் காலத் தவணைக்குள் முடிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் முக்கிய நகரங்களில் இது குறித்து ஒரு பொது விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகளை, தரவுகளை அரசு பெற வேண்டும். இனி நடை பெறும் பணி நியமனங்கள் வெளிப்படையாக நடைபெறச்செய்ய வேண்டும். இதற்காக ஆசிரியர்கள் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் நேரடியாகப் பணியமர்த்தல் செய்யப்படவேண்டும். தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் தரவரிசைப் பட்டியல் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். லஞ்ச ஊழலில் சிக்கும் அனைத்து அதிகாரிகளையும் தற்காலிகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். ஊழலில் தொடர்புடைய அரசியல்வாதிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். தமிழகத்தின் உயர் கல்வியை அரசாங்கம் கேலிக் கூத்தாக்கியுள்ளது. இதைச் சீர்செய்வது என்பது அவசிய உடனடித் தேவையாகும்” என்று கூறியுள்ளார்.