வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (06/02/2018)

கடைசி தொடர்பு:20:20 (06/02/2018)

`பரிசீலிக்கப்படும்' - நியூட்ரினோ ஆய்வு மையம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து

கடந்த வாரம் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்தர்ராஜன், மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் விவசாயச் சங்கங்களின் நிர்வாகிகள் அனைவரும் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் என்னென்ன பாதிப்புகளை தமிழகம் சந்திக்கும் என்று விழிப்பு உணர்வு பிரசாரம் நடத்தினர். இந்த சூழலில், நேற்று தேனி வந்திருந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் நியூட்ரினோ ஆய்வு மையம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் தேனி மாவட்டம் வளர்ச்சிபெறும்’ என்று பதிலளித்தார்.

இந்நிலையில், தனது சொந்த தொகுதியான போடிக்கு வந்திருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் மத்திய அரசின் முடிவு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘நியூட்ரினோ ஆய்வு மையம் தொடங்கலாமா வேண்டாமா என்பது குறித்து பரிசீலிக்கப்படும்’ என்றார்.

இது தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கும்போது, தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முடிவில், தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கத் தடை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. சுமார் இரண்டரை வருடங்களாக முடங்கிக்கிடந்த நியூட்ரினோ ஆய்வுத்திட்டத்துக்கு மத்திய அரசு உயிர் கொடுக்க முயல்கிறது. அதற்கு ஆளும் எடப்பாடி அரசு உதவி செய்ய நினைக்கிறது. தமிழக மக்களின் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தால், எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு நியூட்ரினோ திட்டத்தைத் தமிழகத்தைவிட்டு விரட்ட வேண்டும்’ என்றனர்.