12 வயதில் தொடங்கிய முதல் திருட்டு! - நகைக்கொள்ளை வரை நீண்ட நாதுராமின் மறுபக்கம்

நாதுராம்,

சென்னைக் கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் சிக்கிய நாதுராம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குஜராத் மாநிலம், சூரத்தில் சேலைத் திருடிய நாதுராம், நகைக்கடைகளில் துளைப்போட்டு திருடும் பிரபல கொள்ளையனாக மாறியுள்ளார். 

 
 சென்னைக் கொளத்தூரில் நகைக்கடை நடத்தி வருபவர் முகேஷ். இவரது கடையில் சில மாதங்களுக்கு முன்பு சுவரில் துளைப்போட்டு கிலோ கணக்கில் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டன. சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போலீஸார், கொள்ளைச் சம்பவத்தில் வடமாநில இளைஞர்கள் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, வடமாநிலக் கொள்ளையர்களை போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். 

 கொள்ளையர்களைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையில் மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீஸார் சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானுக்குச் சென்றனர். அங்கு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சிலரைப் பிடித்துக்கொண்டு சென்னை வந்தனர். முக்கியக் குற்றவாளியான நாதுராம், தினேஷ் ஆகியோரைப் பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் தலைமையிலான தனிப்படை போலீஸார் கடந்த டிசம்பர் மாதத்தில் ராஜஸ்தான் சென்றனர். அங்கு கொள்ளையர்களை பெரியபாண்டியன் சுற்றி வளைத்தபோது, முனிசேகரின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் மரணமடைந்தார். இது, தமிழக போலீஸாருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மற்றும் போலீஸார்

 
இதையடுத்து தலைமறைவாக இருந்த நாதுராமை ராஜஸ்தான் மாநில போலீஸார் கைது செய்தனர். சென்னைக் கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க நாதுராம் சில நாள்களுக்கு முன்பு சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். அதன்பிறகு போலீஸ் காவலில் எடுத்து நாதுராமை சென்னை போலீஸார் விசாரித்தனர். விசாரணையின்போது, நாதுராம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாதுராம், சிறுவயது முதலே திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளார். 12 வயதான நாதுராம், சூரத்தில் சேலைத் திருடிய வழக்கில் போலீஸிடம் சிக்கினார். அந்தவழக்கில் சிறைக்குச் சென்ற நாதுராம், தொடர்ந்து திருட்டு, கொள்ளை, வழிப்பறி, அடிதடி எனப் பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறைக்குச் சென்றுள்ளார். பள்ளிக்கல்வியோடு படிப்பை நிறுத்திய நாதுராம் மீது தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது 28 வயதாகும் நாதுராமை ஒவ்வொரு மாநில போலீஸாரும் திருட்டு, கொள்ளை வழக்குகளில் தேடிவருகின்றனர். ஆனால், பல வழக்குகளில் போலீஸுக்கு டிமிக்கி காட்டிவந்துள்ளார் நாதுராம்.

 

 

 

பெங்களூரில் உள்ள நகைக்கடையில் 10 கிலோவுக்கு மேல் நகைகளைக் கொள்ளையடித்த நாதுராம், அந்த நகைகளையும் விற்று சொகுசாக வாழ்ந்துள்ளார். எப்போதும் டிப்டாப்பாக உடையணியும் நாதுராம், விலைஉயர்ந்த பைக்குகள், சொகுசுக் காரில் பயணிப்பது, விமானத்தில் வந்து திருடுவது என ஹைடெக் கிரிமினலாகவே வலம் வந்துள்ளார். சுவரில் துளைப்போட்டுக் கொள்ளையடிப்பதே நாதுராமின் ஸ்டைல். இதற்காக தனி நெட்வொர்க்கை நாதுராம் வைத்துள்ளார். இதனால்தான் சென்னைக் கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் துளைப்போட்டுக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். கொள்ளையடிக்க நாதுராம், தனி யுக்தியைப் பயன்படுத்தியிருக்கிறார். அதாவது, ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் மூலம்தான் நாதுராம், பெரும்பாலான கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அதிலும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற மாநிலங்களில் வசதியாக இருந்தால் அவர்களிடம்தான் நாதுராம் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். 

நாதுராம், தினேஷ்

சென்னைக் கொளத்தூரில் நகைக்கடை வைத்துள்ள முகேஷிக்கும் ராஜஸ்தான் மாநிலம்தான். சில மாதங்களுக்கு முன்பு சொந்த மாநிலத்துக்குச் சென்ற முகேஷ், அங்கு பந்தா காட்டியுள்ளார். அவரது பணக்கார வாழ்க்கையைப் பார்த்த நாதுராம், முகேஷ் குறித்த முழுவிவரத்தை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மூலம் சேகரித்துள்ளார். கொளத்தூர் கொள்ளைச் சம்பவத்தில் நாதுராமிக்கு, பக்தாராம் என்பவர் பெரிதும் உதவியுள்ளார். நாதுராம், தினேஷிக்கு இந்தியைத் தவிர வேறு எந்தமொழியும் தெரியாது. இதனால், பக்தாராம் மூலம் கொளத்தூர் நகைக்கடை கொள்ளைக்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று, முகேஷ், சாப்பிட வீட்டுக்குச் செல்லும் தகவலை நாதுராமிக்கு பக்தாராம் தெரிவித்துள்ளார். அடுத்து, நாதுராம், துளைப்போட்டு கொள்ளையடித்த சமயத்தில் முகேஷ் வீட்டில் பக்தாராம் இருந்து வேவு பார்த்துள்ளார். அங்கிருந்து செல்போனில் முகேஷின் நடவடிக்கைகளை லைவ்வாக போனில் தெரிவித்துள்ளார் பக்தாராம். 

 கொள்ளையடித்தப்பிறகு பக்தாராம், தினேஷ், நாதுராம் ஆகியோர் நகைகளைப் பங்குபோட்டுள்ளனர். அதன்பிறகு திருப்பதி வழியாக, பெங்களூரு சென்று சொந்த மாநிலத்துக்குச் சென்றுள்ளனர். கொள்ளையடித்த நகைகளை விற்ற நாதுராம், அதில் சொகுசுக் கார் மற்றும் துப்பாக்கி வாங்கியுள்ளார். அந்தத் துப்பாக்கியுடன் அவர் எடுத்த போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததுதான் நாதுராமை போலீஸில் சிக்கியதற்கு துருப்புச்சீட்டாக அமைந்தது. 

 கொள்ளையடித்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்த நாதுராம், அடுத்து அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக மாறவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்குள் போலீஸிடம் சிக்கிவிட்டார். சென்னை மாதவரத்தில் செல்போன் திருட்டு வழக்கில் கைதாகிய நாதுராம், சிறைத்தண்டனையும் அனுபவித்துள்ளார். ஒவ்வொரு கொள்ளைச் சம்பவங்களுக்கும் நாதுராம்தான் தலைவனாகச் செயல்பட்டுள்ளார். சில கொள்ளைச் சம்பவத்தில் நாதுராம் போலீஸிடம் சிக்கியபோது, நடிகர் வடிவேல்பாணியைப் பின்பற்றியிருக்கிறார். அதாவது, சார்.. நான் நீங்கள் நினைக்கும் அளவுக்கு வொர்த் கிடையாது என்று சொல்லியபடி காலில் விழுந்து கொள்ளையடித்த நகைகளில் 50 சதவிகிதத்தைத் போலீஸுடம் ஒப்படைத்துள்ளார். 21 வயது முதல் 28 வயது வரை நாதுராம் கொள்ளையடித்த நகைகளைக் கொண்டு பெரிய ஜூவல்லரி கடையே நடத்தலாம்" என்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!