ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி..! முன்பே சொன்னது விகடன்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்குத் தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை அமைப்பதற்கு 40 கோடி ரூபாய் நிதி தேவைப்பட்டது. அதற்கு, உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் நிதி திரட்டி வந்தனர். தமிழக அரசு சார்பில், ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் ஒரு கோடி ரூபாய் தேவைப்பட்ட நிலையில், தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கும் முதன்மைக்காகவும் போராடும் கருணாநிதி சார்பில் நிதியுதவி அளிக்கப்படுகிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு கிடைக்கப்போகும் இருக்கை என்பது ஒவ்வொரு தமிழருக்கும் கிடைக்கும் பெருமிதம். ஹார்வர்டில் விரைவில் தமிழ் இருக்கை அமைந்து தேன் அமுதத் தமிழோசை உலகமெல்லாம் பரவுதற்கு உலகத் தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயர் நீதிமன்றம், மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் அரியணை ஏறியே தீரும். ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தி.மு.க சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, கடந்த டிச.17ஆம் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், “ஹார்வர்டு தமிழ் இருக்கைத் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை டெக்சாஸ் மாகாணத்தின் டல்லஸ் நகர மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் தலைவர், கால்டுவெல் வேள்நம்பி சந்தித்தபோது, தி.மு.க-வின் சார்பில் பெரிய தொகையைத் தருவதாகக் கூறினார் ” என்று வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!