செயற்கைக் கால்களுடன் சைக்கிளில் இந்தியாவைச் சுற்றும் மாற்றுத்திறனாளி..!

விபத்தில் காலை இழந்த நிலையிலும் மன உறுதியுடன் அதனை வென்று, சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி நாடுமுழுவதும் சைக்கிளில் சென்று விழிப்பு உணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ள மாற்றுத் திறனாளி நெல்லை வந்தபோது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாற்றுத் திறனாளி பிரதீப்குமார்

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் பிரதீப்குமார். கடந்த 2013-ம் வருடம் ரயில் விபத்தில் சிக்கியதில் இடது கால் துண்டிக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்திய ஊனத்தால் மன உறுதியை இழக்காத அவர், செயற்கைக் கால் பொறுத்தினார். வீட்டில் முடங்கிக் கிடக்க மனம் இல்லாத அவர், மக்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டார். அதனால், விழிப்பு உணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாலைப் பாதுகாப்பு, பசுமையான தேசம், சுத்தமான தேசம், வலிமையான பாரதம் ஆகியவற்றை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கடந்த 2017 நவம்பர் 14-ம் தேதி தனது சொந்த ஊரான இந்தூரிலிருந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டார். 29 மாநிலங்களிலும் பயணம் செய்து மொத்தம் 15,000 கி.மீ தூரத்துக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். கேரளா வழியாக நாட்டின் தென்கோடிப் பகுதியான குமரிக்கு வந்த அவர், இன்று நெல்லைக்கு வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் பேசிய பிரதீப்குமார், ’’நான் விபத்தில் காலை இழந்தவுடன் எனக்கு வாழ்க்கையே முடிந்துவிட்டது போல உணர்ந்தேன். பிறகு அதிலிருந்து தேறினேன். வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குவதைத் தடுக்கும் வகையில், சாலை விபத்து குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்த சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். என்னைப் பார்த்து பிற மாற்றுத் திறனாளிகளும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். 

இதுவரை 4,000 கி.மீ தூரம் பயணம் செய்திருக்கிறேன். இன்னும் 11,000 கி.மீ தூரத்தையும் கடந்து வரும் ஜூன் 18-ம் தேதி எனது சொந்த ஊரில் பயணத்தை நிறைவு செய்யத் திட்டமிட்டிருக்கிறேன். எனது பயணத்துக்குப் பல்வேறு நகரங்களிலும் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் என் பயணத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு நெகிழ்ச்சியடைய வைப்பதாக இருக்கிறது’’ என்றார் மகிழ்ச்சியுடன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!