காஞ்சிபுரத்தில் ஸ்ரீதர் ஆதரவாளர்கள் துணிக்கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை!

காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் உள்ள பிரபல பட்டுச்சேலை ஜவுளிக்கடையான பிரகாஷ் சில்க்ஸ் மற்றும் சேக்குப்பேட்டை நடுத்தெருவில் உள்ள பிரபல பட்டுச்சேலை ஜவுளிக்கடை பாபு ஸா ஆகிய கடைகளில்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

பாபு ஸா, வருமான வரித்துறை ரெய்டு

பிரபல ரவுடியான மறைந்த ஸ்ரீதர், வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்துகொண்டே காஞ்சிபுரத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவந்தார். அவருடன் சேர்ந்து, காஞ்சிபுரத்தில் ஜவுளி வியாபாரம் செய்துவந்த பாபு ஷா மற்றும் அவரது உறவினர் பிரகாஷ் ஷா ஆகியோர் கூட்டு சேர்ந்து, பலரின் சொத்துக்களை மிரட்டி வாங்கியதாகப் புகார் உள்ளது.  காஞ்சிபுரம் பகுதியில் அதிக அளவு சொத்துக்கள் இவர்கள் பெயரில்தான் இருக்கின்றன. ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்ட பின்னரும் இவர்கள், அவர்களின் கூட்டாளிகளுடம் சேர்ந்து பல்வேறு சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டுவருகின்றார்கள். மேலும், சமீபத்தில் காஞ்சிபுரத்தில் இரண்டு லட்சம் சதுர அடி நிலத்தை வாங்கியிருக்கிறார் பிரகாஷ் ஷா.

 ஒரு சதுர அடியின் விலை 20,000 ரூபாய். அந்த நிலத்தின் மதிப்பை குறைவாகக் காட்டி பதிவுசெய்துள்ளார் பிரகாஷ் ஷா. இதனால்  அரசுக்கு பெருந்தொகை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், ஜவுளி வியாபாரத்தின் கணக்குகளைச் சரியாகக் காட்டாமல், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், காஞ்சிபுரம் வந்த வருமான வரித்துறையினர், இரண்டு ஜவுளிக்கடைகள் மற்றும் அதன் கிளை அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!