“பள்ளி அணிக்காக மட்டும் கிரிக்கெட் விளையாடு!”- மாணவரை கத்தியால் குத்திய ஆசிரியர்

 

கிரிக்கெட் சம்பந்தமான விவகாரத்தில், ஆசிரியர் மாணவனை கத்தியால் குத்திய சம்பவம், கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹசுருதீன். இவரது மகன் ஹதீகுர்ரகுமான். இவர், கரூர் மணவாடியில் உள்ள ஆஸ்ரமம் மெட்ரவக் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-1 படித்துவருகிறார். அதே பள்ளியில், திண்டுக்கல் மாவட்டம் ஆனைப்பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். அவர், தற்போது கரூர் தாந்தோணிமலையில் வாஞ்சிநாதன் நகரில் குடியிருந்துவருகிறார். கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம்கொண்ட ஹதீகுர்ரகுமான், பள்ளி அணியிலும் விடுமுறை நாள்களில் கரூரில் உள்ள தனியார் கிளப்புக்கும் கிரிக்கெட் விளையாடுவாராம். 'பள்ளி அணிக்கு மட்டுமே கிரிக்கெட் விளையாடு' என்று மாணவனை பன்னீர்செல்வம் கண்டித்திருக்கிறார். இதனால் அடிக்கடி இருவருக்கும் வாய்த்தகராறு வந்திருக்கிறது.

இந்நிலையில், இன்று மாணவர் ஹதீகுர்ரகுமான் பள்ளியில் உடற்கல்வி பாட வகுப்பில் விளையாடிவிட்டு, பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் பிடிக்கும் இடத்திற்குச் சென்று குடிநீர் பிடித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பன்னீர்செல்வம், 'உனக்கு என்ன, அதற்குள் தாகம் எடுத்துவிட்டதா?' எனக்கூறி தகராறு செய்துள்ளார். அப்போது, அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட சக ஆசிரியர்கள் ஓடிவந்து இருவரையும் சமாதானம்செய்துள்ளனர். பின்னர், பிற்பகல் 2.30 மணியளவில் ஹதீகுர்ரகுமான் சாப்பிட்டுவிட்டு பள்ளி வகுப்பறை முன் நின்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த ஆசிரியர் பன்னீர்செல்வம், 'என்னிடமே தகராறு செய்கிறாயா?' என கோபமாகக் கேட்டுள்ளார். மீண்டும் அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆசிரியர் பன்னீர்செல்வம், தன் கையில் வைத்திருந்த சேவல்சண்டையின்போது சேவலின் காலில் கட்டப் பயன்படுத்தும் கத்தியால் மாணவரின் இடுப்பு, தோள்பட்டை, மார்பு உள்ளிட்ட இடங்களில் குத்தியுள்ளார். இதனால், மாணவர் அலறித்துடித்ததும் சக ஆசிரியர்கள் ஓடிவந்து கத்தியை பிடுங்கியுள்ளனர்.

படுகாயமடைந்த மாணவரை ஆசிரியர்கள் ஆம்புலன்ஸை வரவவைத்து கரூர் தாந்தோணிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், ஆசிரியர் பன்னீர்செல்வமும் மாணவர் தன்னை தாக்கியதாகக் கூறி,  கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்தார். இதுகுறித்து வெள்ளியணை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். வேலூரில் நேற்று ஆசிரியர் ஒருவரை மாணவன் கத்தியால் குத்திய விவகாரம் அடங்குவதற்குள், இன்று கரூரில் பள்ளி மாணவரை ஆசிரியரே கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!