வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (07/02/2018)

கடைசி தொடர்பு:17:55 (02/07/2018)

அடக்கப் பாய்ந்த வீரர்கள்...ஆட்டம்காட்டிய காளைகள்! - இது ஆலத்தூர் ஜல்லிக்கட்டு

 

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூரில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700 காளைகள் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்தன. மாடுகள் முட்டியதில் 30 பேர் காயமடைந்தனர்.

ஆலத்தூரில் உள்ள நீலியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு,  இன்று  காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. பரபரவென்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு, மாலை 4.30 மணிக்கு முடிந்தது. முதலில் 600 காளைகள் பங்குபெறுவதாக அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள். ஆனால், 700 காளைகள் பங்கு பெற்றதாக போட்டி முடிவில் அறிவித்தார்கள். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த காளைகளைக்  கால்நடை மருத்துவக் குழுவினர் பரிசோதனைசெய்து, தகுதியுள்ள காளைகளை மட்டும் வாடிவாசலுக்குள் அனுப்பினர். அதேபோல, மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தபின்னரே மாடுபிடி வீரர்களும் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

வாடிவாசலில் முதல் காளையாக, கோயில் காளைகள் நிறுத்தப்பட்டன. போட்டியை மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சியர்  கணேஷ் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துகொண்ட பிறகு, உள்ளூர் காளைகள் முதலில் அவிழ்த்துவிடப்பட்டன. தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விராலிமலை, கீரனூர் எனப் பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்துவரப்பட்டிருந்த காளைகள், ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. வாடிவாசலிலிருந்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளில் பல, மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்கவிடாமல் மிரட்டின. இருப்பினும், பல காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர். காளையை அடக்கிய வீரர்களுக்கும், வெற்றிபெற்ற காளையின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், சில்வர் பாத்திரம், தங்க நாணயம், வெள்ளி நாணயம், தலைக்கவசம், குத்துவிளக்கு, செல்போன், வாளி, உள்ளிட்ட பரிசுகள்  வழங்கப்பட்டன.

காளைகள் முட்டித் தள்ளியதில் சேகர், ஆனந்த், தமிழ்ச்செல்வன், பெரியய்யா உள்பட மொத்தம் 30 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 13-பேர் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டுப் போட்டி, அரசு வழிகாட்டுதலின்படி  முறையாக நடைபெறுகிறதா என்பதை புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் லோகநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள்  தொடர்ந்து கண்காணித்தனர். இலுப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் கோ.பாலசந்திரன் தலைமையிலான  சுமார் 200-க்கும்  மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டை காண ஏராளமானோர் திரண்டிருந்தனர்.