மயிலாடுதுறையில் சம்பா அறுவடைப் பணிகள் மும்முரம்! | harvest works are going busy at mayiladuthurai

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (07/02/2018)

கடைசி தொடர்பு:08:23 (07/02/2018)

மயிலாடுதுறையில் சம்பா அறுவடைப் பணிகள் மும்முரம்!

மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில், சம்பா அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.  

டெல்டாவின் கடைமடைப் பகுதிகளான மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் வராததாலும், வடகிழக்குப் பருவமழை சரியாகப் பொழியாததாலும் சாகுபடிசெய்ய விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். இடையில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்துபோனதால், காவிரி நீர்வரத்தும் பாதியில் நின்றுபோனது. இருந்தாலும், போர்வெல் மூலமும் ஆங்காங்கே வாய்க்கால், குளங்களில் தேங்கிக்கிடக்கும் நீரை இறைத்தும் செய்த சம்பா சாகுபடிக்கு தற்போது அறுவடைக் காலம்.  எனவே, விவசாயிகள் அறுவடைப் பணிகளில் தீவிரமாக உள்ளனர்.  ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து வந்துள்ள நெல் அறுவடை இயந்திரங்களைக்கொண்டு அறுவடை செய்துவருகிறார்கள்.  அறுவடைசெய்த நெல்லை விற்பனைசெய்ய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இதுபற்றி அமைச்சர் ஓ.எஸ். மணியனிடம் பேசியபோது, 'நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் இதுவரை 109 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், 86 நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.  கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமித்து வைக்க, 12 திறந்தவெளி சேமிப்பு மையங்கள் பயன்பாட்டில் உள்ளன.  கொள்முதல் நிலையங்களில் விற்பனைச் செய்யப்படும் நெல்லுக்கான தொகை, விவசாயிகளுக்கு மின்னணு பரிவர்த்தனை முறையில் வழங்கப்படுகிறது.  எனவே, விவசாயிகள் அனைவரும் தங்களது நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடைய வேண்டுகிறேன்' என்றார்.