வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (07/02/2018)

கடைசி தொடர்பு:07:53 (07/02/2018)

வனத்துறை-பொதுமக்களிடையே சச்சரவு!- அமைச்சர் இன்று ஆய்வு

தேனி மாவட்டம், இயற்கையிலேயே மலைகள் சூழ்ந்த மாவட்டம். இதனால், மாவட்ட மக்களின் வளர்ச்சித்திட்டங்கள் சிலவற்றுக்கு வனத்துறையின் அனுமதி கிடைப்பதில் தாமதமும், சில இடங்களில் அனுமதி மறுக்கப்படுவதும் தொடர்கதையாகிவந்தது. இந்நிலையில், மக்களுக்கும் வனத்துறைக்குமான சச்சரவுகள் அதிகரித்துவந்தன. இந்தச் சூழலில், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இன்று தேனி மாவட்டத்தில் வனப்பகுதிக்குள் ஏற்படுத்தப்படும் மக்கள் வளர்ச்சிப்பணிகள்குறித்து கள ஆய்வுசெய்ய இருக்கிறார்.

அவருடன், தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வனத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகள் செல்ல இருக்கிறார்கள். பொதுமக்கள், தங்களது கோரிக்கைகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தெரிவிக்கலாம். தேனி மாவட்டத்தின் நீண்ட நெடிய கோரிக்கைகளுள் ஒன்று, சாக்கலூத்துமெட்டு சாலை. தேவாரம் மலையடிவாரத்திலிருந்து தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள சாக்கலூத்துமெட்டிற்கு சாலை அமைக்கும் பணிக்கு வனத்துறை பல ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டுவந்தது. இந்நிலையில், இன்று நேரடியாக தேவாரம் செல்லும் அமைச்சர், சாக்கலூத்துமெட்டுச் சாலை தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.