ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். முதல்வராகும்போது நான் ஆகக் கூடாதா? - தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதலமைச்சராகும்போது நான் ஆகக்கூடாதா என்று தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். 

தஞ்சை மாவட்டத்தில், மக்கள் புரட்சிப் பயணம் என்கிற பெயரில் மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., டி.டி.வி. தினகரன் நடத்திக்கொண்டிருக்கிறார். ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கதிராமங்கலம் பகுதி மக்களிடையே பேசிய தினகரன், ’இப்போது ஆட்சியில் உள்ளவர்களில் 6 பேரைத் தவிர எங்கள் அணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். அப்படி வந்தால், தேர்தல் வராமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதில், நான் முதல்வர் பொறுப்பை ஏற்க மாட்டேன். என்னோடு வந்த 18 எம்.எல்.ஏ-க்களும் தியாகிகள்; அவர்களில் ஒருவருக்கு முதல்வர் பதவி தரப்படும்’ என்றார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வனிடம் தினகரனின் கருத்து குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன், ’அமைச்சர்கள் 6 பேரைத் தவிர யார் வந்தாலும் எங்களுடன் சேர்த்துக்கொள்வோம். துரோகிகள் மட்டும் வெளியில் சென்றால்போதும். மற்ற எம்.எல்.ஏ-க்கள் ஒத்துழைத்தால், இந்த ஆட்சி 3 வருடங்களுக்கு நீடிக்கும் என தினகரன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். நல்ல கருத்தைத்தான் கூறியிருக்கிறார்’ என்றார். இதையடுத்து, நீங்கள் முதலமைச்சராக வர வாய்ப்பிருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. ’’ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். ஆகியோர் முதலமைச்சராக வரும்போது, நான் ஏன் முதலமைச்சராக வரக் கூடாது?’ என்று எதிர்க்கேள்வி எழுப்பினார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!